தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்தல் மற்றும் கையளித்தல் ஆகிய வைபவங்களை இந்த அமைச்சின் முன்அனுமதி இன்றி ஒழுங்கு செய்ய வேண்டாம் என்று மேற்படி அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி அறிவுறுத்தல் அனுப்பியுள்ளார்.
யாழ். மாவட்டச் செயலாளர் என். வேதநாயகன், கிளிநொச்சி செயலாளர் எஸ். அருமைநாயகம், முல்லைத்தீவு செயலாளர் திருமதி. ஆர். கேதீஸ்வரன், மன்னார் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, வவுனியா செயலாளர் எம்.பி. ஆர். புஸ்பகுமார, அம்பாறை செயலாளர் ரி.பி வணிகசிங்க, திருகோணமலை செயலாளர் ஆர்.ஏ.ஏ புஷ்பகுமார மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்களுக்கு இவ்வறிவித்தல் சம்பந்தமான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, உயர் கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் டி.சி. திஸாநாயக்க, வீடமைப்பு நிர்மாண அமைச்சின் செயலாளர் டபிள்யூ.கே.கே. அத்துக்கோறள, வடமாகாண சபையின் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன, வீதி அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் என்.ஆர். சூரியாராய்ச்சி, தேசிய வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் எப்.எஸ். பாலன்சூரிய ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 50 ஆயிரம் வீடமைப்புத்திட்டம் நல்லிணக்கத்துக்கான வீதிகளை புனரமைக்கும் முன்னுரிமைத்திட்டம், பொருளாதார மேம்படுத்தல் திட்டம் முதலிய பல அபிவிருத்தித் திட்டங்களை தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சு ஆரம்பித்துள்ளமை தெரிந்ததே.
இந்த அமைச்சு ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் வருவதால் இந்தத் திட்டங்களை ஆரம்பித்தல் மற்றும் கையளித்தல் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் நெருக்கமாக ஆலோசிக்க வேண்டியுள்ளது.
எனவே இந்த அமைச்சின் முன்அனுமதியின்றி இத்தகைய நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த செய்தியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் அனுப்புவதற்கு கவனம் செலுத்தவும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினால் 140 கோடி ரூபா செலவில் மண்டூர் – குறுமண்வெளி துறைக்கு பாலம் கட்டப்படவுள்ளது. இதற்கான அனுமதி அமைச்சரவையினால் வழங்கப்பட்ட நிலையில் ஏனைய பூர்வாங்க நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டுள்ளது. இன்னமும் கேள்வி விளம்பரம் கூடசெய்யப்படவும் இல்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவும் இல்லை என்று தெரியவருகிறது.
இந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அடிக்கல் நாட்டு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டதை கவனத்தில் கொண்டே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

