கவர்னரை வழி மறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

281 0

201608241017309439_ADMK-MLAs-request-Puducherry-Assembly-20-days-to-hold_SECVPFபுதுச்சேரி சட்டசபையை 20 நாட்களுக்கு நடத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடியிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

புதுவை சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதால் வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் அரசின் 6 மாத செலவீனங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 350 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. தேர்தலுக்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது.

புதிய அரசு சார்பில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. கூட்டத்தில் முதல் நாள் என்பதால் இன்றைய தினம் கவர்னர் கிரண்பேடி உரையாற்றினார்.

இதற்காக இன்று காலை 9.25 மணிக்கு ராஜ்நிவாசில் இருந்து கார் மூலம் சட்டமன்ற வளாகத்துக்கு கவர்னர் கிரண்பேடி வந்தார். அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் ஆகியோர் கவர்னர் கிரண்பேடியை வரவேற்று சட்டமன்றத்தின் மைய மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.

அப்போது திடீர் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகிய 4 பேரும் கவர்னரை வழி மறித்தனர். அப்போது கவர்னரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் மக்கள் பிரச்சனைகள் குறித்து அதிகம் பேச வேண்டி இருப்பதால் சட்டசபையை 20 நாட்கள் நடத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர் கிரண் பேடி அதன் பிறகு உரையை வாசிக்க சட்டசபை மைய மண்டபத்துக்கு சென்றார்.

பின்னர் கவர்னர் கிரண்பேடி உரையை வாசிக்க தொடங்கினார். அப்போது மீண்டும் மைய மண்டபத்துக்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வைத்து இருந்த பேனர்களை ஏந்தி கோ‌ஷமிட்டனர். அந்த பேனரில் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க 20 நாட்கள் சட்டசபையை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தனர். சிறிது நேரம் கோ‌ஷமிட்டு விட்டு பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர்.