பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான விடயங்களில் அரசாங்கம் தவறிழைக்க முடியாது- சம்பந்தன்

375 0

பயங்கரவாத தடைச்சட்டம் இந்த நாட்டு சட்டத்தில்  இருந்து நீக்கப்பட வேண்டியதே என அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளபோதும், எதனடிப்படையில் அதேசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்களை தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள் நிகழாமையை உறுதிசெய்வதற்கான விசேட நிபுணர் பப்லோ டிக்ரீப்பிற்கும் எதிர் கட்சிதலைவர் இரா. சம்பந்தனுக்கும்  இடையில் இன்று கொழும்பில சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான விடயங்களில் தவறிழைக்க முடியாது என தெரிவித்த இரா. சம்பந்தன், அவ்வாறு தவறிழைக்கப்படும்பட்சத்தில் அது நல்லிணக்க படிமுறைகளிலே பாரியதாக்கத்தினை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு சிலர் நல்லிணக்க மற்றும் அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்புவதற்கு தயாராக உள்ள நிலையில், இந்த விடயங்கள் அவர்களுக்கு சாதகமாக இருப்பதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம நிறைவேற்றுவதனை ஐ.நா. உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், மற்றும் தமிழ் அரசியல்கைதிகள் போன்றவிடயங்களில் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தன் இதன்போது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

உண்மையான புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டுமெனில், இந்த விடயங்கள் மேலும் தாமதமின்றி முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுக்ள சபையின் பிரதிநிதி, இலங்கையில் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலும், அரசியல் தீர்வினை அடையும் வகையிலும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கும என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment