டெங்குவால் இறந்ததாக சான்றிதழ் வழங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளை அரசு மிரட்டுகிறது: மு.க.ஸ்டாலின்

1089 0

டெங்குவால் இறந்ததாக சான்றிதழ் வழங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளை அரசு மிரட்டுகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழும்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டு அறிந்தார்.

அப்போது நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை முழுமையாக எடுக்கவில்லை. இப்போது தமிழ்நாடு டெங்கு மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது.

மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் முன்கூட்டியே டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை.

டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்தியக்குழு வந்தது. அவர்கள் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. பொத்தாம் பொதுவாக ஆய்வு செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் இதை ஒரு பெரிய வி‌ஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. டெங்கு காய்ச்சல் என்பது ஒரு சாதாரண வி‌ஷயம் போல் பேசி உள்ளனர். மத்திய-மாநில அரசுகள் இதற்கு பொறுப்பேற்க முடியாது என்று கூறி உள்ளனர்.அது மட்டுமல்ல, 40 பேர் தான் இறந்துள்ளதாகவும் தவறான தகவலை தெரிவித்திருக்கிறார்கள். 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில் மத்திய குழு இவ்வாறு கூறுவது வேதனையாக உள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சலால் சிலர் இறந்துள்ளனர்.

ஆனால் டெங்கு காய்ச்சலில் இறந்ததாக தனியார் ஆஸ்பத்திரிகள் சான்றிதழ் கொடுக்க கூடாது என அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையும் மீறி சான்றிதழ் கொடுத்தால் ஆஸ்பத்திரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அச்சுறுத்தி உள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் தமிழ்நாடே நிலை குலைந்துள்ளது. ஆனால் அதைபற்றி ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படாமல் விழா நடத்துகிறார்கள்.திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சலில் ஒருவர் கூட இறக்கவில்லை என்று அந்த மாவட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி கொடுக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment