ஆப்கானிஸ்தான்: 2500 கிலோ வெடிப் பொருளுடன் லாரி குண்டு பறிமுதல்

3344 0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்குள் 2500 கிலோ வெடிப் பொருளுடன் லாரி குண்டு சோதனைச் சாவடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபுல் நகரில் கடந்த மே மாதம் நடைபெற்ற லாரி குண்டு தாக்குதலில் 150-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்துக்குரிய வாகனங்களை போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் காபுல் மீது லாரி குண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தேசிய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நேற்றிரவு காபுல் நகர எல்லைப்பகுதிகளில் வாகன பரிசோதனை நடைபெற்றபோது வேகமாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட முயன்றனர். போலீசாரை மோதுவதுபோல் வேகமாக ஓட்டிவந்த நபர் அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றபோது விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

அந்த லாரியை சோதனையிட்டபோது தக்காளி பெட்டிகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2500 கிலோ அளவிலான வெடிப் பொருட்களையும், பயங்கரமான வெடி குண்டுகளையும் கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். உரிய நேரத்தில் அந்த லாரியை மடக்கிப் பிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக காபுல் நகர போலீஸ் தலைவர் தெரிவித்தார்.

Leave a comment