இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று மீண்டும் விசாரணை

329 0

இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் இன்று மீண்டும் விசாரணை நடத்துகிறது. இதற்காக இரு தரப்பினரும் மாலை 3 மணிக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்-அமைச்சருமாக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சி இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உண்மையான அ.தி.மு.க. தாங்கள் தான் என்றும், கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்திய தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை தொடர்ந்து, அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கிவைத்தது.

இதனையடுத்து, சசிகலா அணியும் உண்மையான அ.தி.மு.க. தாங்கள் தான் என்று உரிமை கொண்டாடியது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் சார்பில் தனித்தனியாக லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், சசிகலா அணியில் இருந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்தார். இதனால், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் மற்றொரு அணியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதித் தீர்ப்பை அக்டோபர் 31-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டது.

(பின்னர் இந்த ‘கெடு’வை நவம்பர் 10-ந்தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு நீடித்தது.)

இதனைத் தொடர்ந்து, இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரிகள், அ.தி.மு.க.வின் இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சமர்பிக்கப்பட்ட பிரமாண பத்திரங்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் குறித்தும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் தங்களுக்கு இருக்கும் ஆதரவு குறித்தும் இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் தரப்பில் புதிய மனு ஒன்று இந்திய தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “எதிரணியினர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் பல போலியானவை என்று ஏற்கனவே நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். அதுகுறித்த உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து, உண்மையான அ.தி.மு.க. யார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை தாக்கல் செய்ய எங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடப்பட்டது. மேலும், அந்த மனுவில், இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதிக் கட்ட விசாரணையை 13-ந் தேதியில் இருந்து 21-ந் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இம்மாதம் 13-ந் தேதி நடைபெற இருந்த விசாரணையை 16-ந் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் நடைபெறுகிறது. இதற்காக மாலை 3 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு இரு அணியினருக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில், அமைச்சர் சி.வி.சண்முகம், மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்பட 15 பேர் கொண்ட குழுவினர் டெல்லி சென்றனர்.இதேபோல், டி.டி.வி.தினகரன் அணி சார்பில், அவரது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் அங்கு செல்கின்றனர்.

முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை இந்திய தேர்தல் கமிஷனில் ஏற்கனவே நடந்தபோது எங்களது தரப்பு வாதங்களை முழுமையாக எடுத்து வைத்தோம். இப்போது மறுவிசாரணை நாளை(அதாவது இன்று) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. அதற்குள் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது. அதற்கான ஆவணங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

எதிர் தரப்பில் தான் (டி.டி.வி.தினகரன்) எப்படியாவது இந்த விசாரணையை காலதாமதம் செய்யவேண்டும். விசாரணையே நடக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பல உத்திகளை கையாண்டு வருகின்றனர். அவை அனைத்தையும் முறியடித்து தேர்தல் ஆணையத்தில் எங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்து கூறுவோம்.

உண்மையான அ.தி.மு.க. முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் தலைமையில் தான் செயல்படுகிறது என்பதை நிரூபித்து இரட்டை இலை சின்னத்தை கண்டிப்பாக பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment