ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகதால் நவாஸ் ஷெரீப் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
‘பனாமா’ கேட் ஊழல் வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை அந்நாட்டு தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரித்து வருகிறது. கடந்த 2-ந் தேதி நடந்த விசாரணையின் போது நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது ஊழல் வழக்குகள் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால் நவாஸ் ஷெரீப்பின் வக்கீல் ஹவாஜா ஹரீஸ், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன், ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, 13-ந் தேதி (நேற்று) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூறி, வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் முகமது சப்தார் கோர்ட்டில் ஆஜராகினர். ஆனால் நாவஸ் ஷெரீப் ஆஜராகவில்லை.
இருப்பினும் நவாஸ் ஷெரீப், மரியம் நவாஸ், முகமது சப்தார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை தொடங்கியதும் கோர்ட்டு அறைக்குள் வக்கீல்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோபம் அடைந்த நீதிபதி கோர்ட்டு அறையை விட்டு, வெளியேறினார். பின்னர் அவர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் மற்றும் வழக்கு விசாரணை 19-ந் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டார்.
இதற்கிடையே நாவஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினரை கோர்ட்டில் ஆஜராக அழுத்தம் கொடுக்கும் விதமாக அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கவும், சொத்துகளை பறிமுதல் செய்யவும் தேசிய பொறுப்புடைமை அமைப்பு ஆலோசித்து வருகிறது.
நவாஸ் ஷெரீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

