வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என மக்கள் போராட்டம்(காணொளி)

496 0

வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என தெரிவித்து மக்கள் வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

வவுனியா தேக்கவத்த மற்றும் கற்குளி மக்கள் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என தெரிவித்து  வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், கடமைக்கு வந்த பிரதேச செயலாளர் க.உதயராசாவின் வாகனத்தை வழி மறித்தும் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் போது தங்கள் கிராமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம சேவகர் தங்களுக்கு அநீதி இழைத்திருப்பதாக தெரிவித்த மக்கள், கிராம சேவகருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மக்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கிராம சேவகர், அரசாங்கத்தின் வர்த்தமானியின் பிரகாரமே மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க முடியும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் அரசாங்க அதிபரிடம் முறையிட்டதுடன் தங்களுக்கு தீர்வு வழங்கப்படும்வரை செல்ல மாட்டோம் என தெரிவித்து மாவட்ட செயலகத்தின் வாயிலை மறித்து முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலைமை மோசமடைந்த நிலையில் வுவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தததுடன் அதிகாரிகளுடன் கதைத்து மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருவதாக தெரிவித்தததையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a comment