டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது: எஸ்.பி.வேலுமணி

217 0

டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உள்ளாட்சி அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் உள்ளாட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சலைத் தடுப்பது மற்றும் தொடங்க இருக்கும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உள்ளாட்சித் துறை எடுத்து வருகிறது. தொற்று நோய்களை தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, டெங்கு நோயை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உள்ளாட்சி ஊழியர்கள் தவிர, பிற ஊழியர்களும் தொற்றுநோய் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். டெங்கு தொடர்பாக தனியார் மருத்துவமனைகளிலும், உள்ளாட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கிறார்கள். காய்ச்சல் பாதித்தவர்களை உள்ளாட்சி அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டு வருகின்றனர்.
ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து அமைப்புகளிலும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். கிராமங்களில் 300 வீடுகளாக பிரித்துக் கொண்டு பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட, ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள குழுக்கள், ஒவ்வொரு பகுதியாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதையொட்டி அதிக அளவு மழை பெய்யும இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment