கொசுக்களே இல்லாத நீலகிரி மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு

212 0

கொசுக்களே இல்லாத நீலகிரி மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கொசுகள் இல்லை. குறைந்த தட்பவெப்ப நிலையால் இங்கு கொசுக்கள் உயிர் வாழ முடியாது.

இந்நிலையில் மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் 3 பேரும், பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் 3 பேரும், குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி வார்டில் சகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் ரத்தபரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்குழு கிராமம் கிராமமாக சென்று காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரிகளையும் சேகரித்தனர். காய்ச்சல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே ஆஸ்பத்திரிக்கு வருமாறு பொதுமக்களுக்கு மருத்துவக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொசுக்களே இல்லாத நிலையில் டெங்கு பாதிப்பு எப்படி வந்தது? என்று கேட்டபோது மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரகுபாபு, ஸ்ரீதர் ரவிக்குமார், சிரியன் ஆகியோர் கூறியதாவது:-

மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையில் கொசுக்கள் வாழமுடியாது. பஸ், ரெயில், கார் உள்ளிட்ட வாகனங்களில் கொசுக்கள் வந்தாலும் சிறிது நேரத்தில் தட்பவெப்ப நிலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்து விடும்.

இங்கிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, மைசூரு, பெங்களூருவில் வேலை செய்து வருகிறார்கள். அங்கு தங்கியிருக்கும்போது அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக அவர்கள் சொந்த ஊர் திரும்பியபோது அவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

தேவையான டமின் புளு மத்திரைகள் உள்ளதால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ளனரா? என்று மருத்துக்குழு கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a comment