கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினில் போராட்டம்

3010 0

கட்டலோனியா தனிநாடாக பிரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.

ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கட்டலோனியா தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த 1- ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தனிநாடு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்படும் என கட்டலோனியா தலைவர்கள் தெரிவித்தனர்.

தற்போது நிலவும் அரசியல் நிச்சயமற்ற நிலையில் கட்டலோன் பிராந்தியத்தில் இருந்து வெளியேறுவதாக வணிக நிறுவனங்கள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்து வருகின்றன. ஸ்பெயினின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றைக் கட்டுப்படுத்தும் கைக்சா அறக்கட்டளை, அங்கு நெருக்கடி நிலை தொடர்வதால் அதன் தலைமையகத்தை பால்மா டி மல்லோர்காவிற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஸ்பெயினுடன் கட்டலோனியா இணைந்திருக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் அந்நாட்டின் தலைநகரில் பேரணிகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாட்ரிட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் கட்டலோனிய நகரமான பார்சிலோனாவில் இப்பிரச்னைக்கு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையை வலியுறுத்தி மக்கள் போராட்டம் செய்தனர்.

ஸ்பெயின் மற்றும் கட்டலோனியாவில் கொடிகளை ஏந்திய போராட்டக்காரர்கள், “வாழ்க ஸ்பெயின்! வாழ்க கட்டலோனியா!” என்று குறிப்பிடும் பதாகைகளை ஏந்தியிருந்தார்கள்.

கட்டலோனின் சுதந்திரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், கட்டலான் அதிபர் சார்லஸ் பூஜ்டியமோன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஆற்றவுள்ள உரைக்காக அப்பிராந்தியமே காத்திருக்கிறது.

Leave a comment