ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் – தாக்குதலுக்கு உள்ளான இளைஞர், மாத்தறை மருத்துவமனைக்கு மாற்றம்

341 0

ஒன்றிணைந்த எதிர்க்காட்சியால் ஹம்பாந்தோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை உயர் அதிகாரியொருவர் இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் இந்த தாக்குதல் தொடர்பான காணொளி மற்றும் மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளை பயன்படுத்தி இந்த விசாரணையை மேற்கொள்ளவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் ஆய்வு பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின் போது உதவி காவற்துறை அதிகாரி ஒருவர் இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த இடத்தில் இருந்த காவற்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன், சம்பவம் தொடர்பில் வெளியான காணொளி தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

மத்தளை வானூர்தி நிலையத்தை இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகத்திற்கு முன்னால் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 28 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை மருத்துவமனைக்கு மாற்றியனுப்பட்டுள்ளார்.

Leave a comment