இறைமையும் உரிமையும் – பி.மாணிக்கவாசகம்

469 0

புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு இறைமை பகிரப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார். கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே மக்கள் ஆணையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்றிருக்கின்றது. பகிரப்பட்ட இறைமை மட்டுமல்லாமல், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி என்ற வேறு விடயங்களும்கூட அதில் இடம்பெற்றிருக்கின்றன.

தேர்தலுக்காக மட்டும் அந்தத் தேர்தல் அறிக்கை முன்வைக்கப்படவில்லை. புதிய அரசிலயமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக அரசியல் கட்சிகளினதும், பொது அமைப்புக்கள், பொதுமக்களினதும் கருத்துக்கள் திரட்டப்பட்டபோது, இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதோர் அரசியல் தீர்வு காணும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்மொழிவுகளை வைக்கவில்லையா என்ற வினா எழுந்தபோது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் எல்லா விடயங்களும் கூறப்பட்டிருக்கின்றன. அதையே கூட்டமைப்பின் முன்மொழிவாகக் கொள்ளப்படுகின்றது என பதிலளிக்கப்பட்டிருந்தது.

சுயநிர்ணய உரிமையும், சமஷ்டி ஆட்சி முறையும் சிங்கள அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், சிங்கள மக்கள மத்தியிலும் அரசியல் ரீதியாக ஆபத்தான் சொற்களாக உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து, அஹிம்சை ரீதியாகவும், ஆயுதமேந்தியும் தமிழர்கள் போராட்டம் நடத்தியதன் பின்னணியில் அரசியல் ரீதியான இந்த இரண்டு விடயங்களும் பிரிவினைக்கு வித்திடுவன. நாட்டைத் துண்டாடுவதற்காக முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் என சிங்களவர்கள் மத்தியில் ஆழமான கருத்து உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இறைமை பகிரப்படுவதா……?

இந்த நிலையில் இறைமை குறித்து சிந்திப்பதும், அரசியல் தீர்வில் தமிழ் மக்களுக்கு இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நோக்குவதும் அவசியமாகின்றது.

இறைமை என்பது ஒரு நிலப்பரப்பின் அதிகார எல்லைக்குள் நிலவுகின்ற அதியுச்ச அதிகாரத்தையே குறிக்கின்றது. மன்னர் ஆட்சிக் காலத்தில் இறைமை என்பது அரசனுக்கு உரியதாக்கப்பட்டிருந்தது. இதனை முன்னர் இறையாண்மை என குறிப்பிட்டு வந்தனர். இறையாண்மை என்பது குறிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில் செயற்படுத்தத் தக்க வகையில் அதிகாhரம் தங்கியிருப்பதையே குறிக்கின்றது. மன்னர் ஆட்சிக் காலத்தில் இந்த அதிகாரம் அரசனில் தங்கியிருந்தது. எனவே, இறையாண்மை மன்னரிடம் சார்ந்திருந்தது.

தமிழர்கள் அந்த இறையாண்மையானது, மாட்சிமை உடையதாக அதாவது பல வடிவங்களிலும் சிறப்பானதாக அமைய வேண்டும் என்பதற்காக இறைமாட்சி என குறிப்பிட்டிருந்தனர். மன்னருடைய ஆட்சியானது நியாமானதாகவும் நீதி நிறைந்ததாகவும் உயர்ந்த ஒழுக்கக் கோட்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் இதன் மூலம் வலியுறுத்தியிருந்தனர்.

மன்னர் ஆட்சி மறைந்து மக்கள் ஆட்சி மலர்ந்ததும், இந்த இறைமாட்சி, அல்லது இறையாண்மை மக்களிடம் மாறியது. மன்னர்களைப் போன்று அரச அந்தஸ்தும், அலங்கார நிலைப்பாடுகளும் மக்களிடம் இல்லாத காரணத்தினால் இது இறைமையாக மக்களிடம் பொதிந்தது. இதுவே ஜனநாயக ஆட்சியாகவும், மக்கள் ஆட்சியாகவும் பரிணமித்தது. ஜனநாயக முறைமை இல்லாத நாடுகளில் சர்வாதிகாரம், தனிமனிதன் கோலோச்சும் முறைமை காணப்படுகின்றது. அங்கு இறைமை சர்வாதிகாரியினால் பறிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

இந்த இறைமை என்பது எடுக்க முடியாதது. கொடுக்கவும் முடியாதது. இறைமை என்பது இயற்கை வழி வந்த உரிமையாகும். இதனை எடுப்பதற்கோ கொடுப்பதற்கோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. மக்களுக்குரிய இறைமையை – அதிகாரத்தையும் பலத்தையும் அரசியல்வாதிகள் கைப்பற்றி அவற்றை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்ற முறைமை இன்று பல நாடுகளில் காணப்படுகின்றன. அத்தகைய அதிகாரங்களே இப்போது பயன்படுத்தப்படுகின்றன. இது இயற்கைக்கு முரணானது. இயற்கை தர்மத்திற்கும் இயற்கை நீதிக்கும் விரோதமானது.

அரசியலமைப்பில் இறைமை

மன்னர் ஆட்சி முறைமை மாற்றமடைந்து ஆட்சி மக்கள் கைகளுக்கு மாறியதுடன், இறையாண்மை இறைமையாக மக்களுடைய உரிமையாக – சக்தியாக மாற்றமடைந்தது. இந்த உரிமை – சக்தியின் அடிப்படையில்தான் ஜனநாயக நாடுகளில் இந்த மக்களுடைய சக்தியை அரசாங்கங்களும், அரசியல்வாதிகளும் அபகரித்து அரசியல் ரீதியாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதையே இன்றைய உலக நாடுகளில் காண முடிகின்றது.

இலங்கை ஒரு நாடு என்ற வகையில் சிங்கள மக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அந்த உரிமைகள் அனைத்தும் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய இனங்கள் அனைத்துக்கும் இருக்கின்றது. தமிழர்களாக இருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம். பறங்கியர் மற்றும் எந்த இனத்தவர்களாகவும் இருக்கலாம். இந்த மண்ணில் பிறந்து, இந்த மண்ணையே தமது வாழ்விடமாகக் கொண்டவர்கள் அனைவருக்கும் அந்த உரிமைகள் இருக்கின்றன. இது ஒட்டுமொத்தமாக இந்த நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களினதும் இறைமையாகும்.

உரிமையும் அதிகாரமும் மக்களிடத்திலேயே தங்கியிருக்க வேண்டும். இதைத்தான் இறைமை மக்களுடையது என கூறுகின்றார்கள். இந்த இறைமை ஒருநாட்டின் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பக்கசார்பற்ற முறையில் இன மதம் சார்பில்லாத வகையில் இறைமை நாட்டு மக்கள் அனைவருக்கும் உரியது என்பது அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அரசியல் ரீதியான உரிமைப் பிரச்சினைகள் இல்லாத நாடுகளில், அரசியலமைப்பின் உறுதிப்பர்டு குறித்து கவலையடைய வேண்டியதில்லை. ஆனால் இனப்பிரச்சினை புரையோடியுள்ள இலங்கையில் இறைமை மக்களுடையது என்பது ஆழமாக ஆணித்தரமாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும்.

அரசோ பேரினமோ இறைமையை அபகரிக்கக் கூடாது

ஒர் இனத்தைச் சார்ந்த மொழிக்கு அல்லது மதத்திற்கு ஓர் அரசியலமைப்பில் உயர்ந்த அந்தஸ்தையோ, முதன்மை நிலையையோ வழங்குவது என்பது, அந்த நாட்டு மக்களுடைய இறைமைக்கு மதிப்பளிக்கப்படுவதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் ஏற்கனவே பெரும்பான்மை இன மக்களால் சிறுபான்மை தேசிய இன மக்கள் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மேலாதிக்கப் போக்கிலான இத்தகைய அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நாட்டில் இனப்பிரச்சினை உருவாகியது. இறைமை மக்களுடையது என்ற இயற்கை சார்ந்த அரசியல் கோட்பாட்டைப் புறந்தள்ளி, பேரினவாத அரசுக்கும், பேரின மக்களுக்குமே இறைமை உரியது என்ற போக்கில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கோலோச்சியதன் விளைவாகவே இந்த நாடு நீண்டகால யுத்தம் ஒன்றினால் சின்னாபின்னமாகியது.

அது மட்டுமல்லாமல், இந்த ஆட்சிப் போக்கு இனங்களிடையே கசப்பையும், பகை உணர்வையும், இனவிரோதப் போக்கையும் மேலோங்கச் செய்துள்ளது. கொடியதொரு யுத்தத்தின் பின்னர், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும், ஏற்படுத்தி நாட்டில் உண்மையாகவே நல்லாட்சி முறையை உருவாக்க வேண்டுமானால்;, இன மத பேதமற்ற முறையில் மக்களுடைய இறைமை மதிக்கப்பட வேண்டும். மக்களுடைய இறைமையைப் போற்றிப் பேணும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, ஆட்சி நடத்தப்பட வேண்டும். இல்லையேல் நாடு மேலும் மேலும் சீரழிவதற்கும் மோசமான அழிவுகளை நோக்கி நகர்ந்து செல்வதற்கும் வழிவகுத்ததாகவே முடியும்.

இறைமையும் மனித உரிமையும்

நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதில் அரசு முக்கியமான பொறுப்புக்களை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டிருக்கின்றது. உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றுக்குப் பொறுப்பு கூறுதல், உண்மையைக் கண்டறிதல், பாதிப்புகளுக்கு நீதியும், நிவாரணமாக இழப்பீடு வழங்குதல், பாதிப்புகள் மீள் நிகழாமையை உறுதி செய்தல் ஆகிய நான்கு விடயங்களை உள்ளடக்கி பொறுப்பு கூறும் செயற்பாட்டை நிறைவேற்றுவதான ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி நல்லாட்சி அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கின்றது.

அத்துடன் யுத்தம் ஒன்று மூள்வதற்கு வழிவகுத்த இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் வழிமுறையில் நிரந்தரமாகத் தீர்வு காண்பதற்கும் ஒப்புக்கொண்டிருக்கின்றது. அதனை நிறைவேற்றுவதற்காக புதிய அரசியமைப்பை உருவாக்குவதற்குரிய செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்;ட மீறல்களுக்குப் பொறுப்பு கூறுதலின் மூலம் மனித உரிமையை நிலைநாட்டுவதற்கும், வருங்காலத்தில் மனித உரிமையை நாட்டில் மேம்படுத்தவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கும், அரசாங்கம் ஐநா மனித உரிமைப் பேரவையின் ஊடாக சர்வதேசத்தின் ஆணையை ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

இருப்பினும், யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்து, உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல் நிவாரணமளித்தல், மீண்டும் நிகழாமையை உறுதி செய்தல் என்பவற்றின் ஊடாக ஏற்கனவே இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டனை பெறுவதில் இருந்து தப்பியிருக்கின்றமைக்கு முடிவு காணுவதைச் செய்ய முடியாது என்று அரசாங்கம் அறுதியிட்டு கூறி வருகின்றது. இது சர்வதேசத்திற்கு அரசாங்கம் அளித்துள்ள உறுதிமொழிகளை அப்பட்டமாக மீறுகின்ற ஒரு செயற்பாடாகும்.

இந்த நிலையில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுகின்ற அரசாங்கத்தின் பொறுப்பி;ல் மனித உரிமை சார்ந்த விடயங்களும் தமிழ் மககளுடைய இறைமையும் இரண்டறக் கலந்திருக்கின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுடைய சக்திவாய்ந்த அரசியல் தலைவராகவும், அதேவேளை இந்த நாட்டின் மூன்றாவது தலைமைச் சக்தியாகிய எதிர்க்ட்சித் தலைவராகவும் இருக்கின்ற போதிலும், அரசாங்கத்தின் பொறுப்பு கூறும் விடயத்தில், அரசாங்கத்திற்கு நேரடியாக அழுத்தங்களைக் கொடுப்பதைக் காண முடியவில்லை.

இடைக்கால அறிக்கையின் எதிரும் புதிருமான நிலை

அதேவேளை, இனப்பிரச்சினைக்கு, புதிய அரசியலமைப்பின் ஊடாக ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்ற ஆழமான நம்பிக்கையை அவர் கொண்டிருக்கின்றார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை எற்றதன் பின்னர் 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஓர்; அரசியல் தீர்வு எட்டப்பட்டுவிடும் என்று அவர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டி வந்தார். அரசியல் தீர்வு காண்பதற்கான வழிமுறையில் பயணிக்கின்ற அரசாங்கத்திற்கு, நாட்டின் தென்பகுதியில் உள்ள பேரினவாதிகளான சிங்கள அரசியல் கடும்போக்காளர்களிடம் இருந்து இடையூறுகள் ஏற்படாத வகையில் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளையும் தமிழ் மக்களையும் அவர் வழிநடத்தி வந்ததை மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது.

ஆயினும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய விடயங்கள் குறித்து, தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் அவர் அரசாங்கத்திற்கு உரிய முறையில் அழுத்தங்களைக் கொடுத்து வந்ததாகவும் கூற முடியாதுள்ளது.

இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளான பகிரப்பட்ட இறைமை, வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்ற விடயங்களை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்குவதற்கு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு சந்தேகங்களும் வினாக்களும் எழுந்திருக்கின்றன.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான இடைக்கால அறிக்கையில், புதிய அரசியலமைப்பின் அடிப்படை விடயங்கள் குறித்த கோட்பாடுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்தக் கோட்பாடுகளுக்கும், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கோட்பாடுகளுக்கும் இடையே எதிரும் புதிருமான நிலைமையே காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் இறைமை வலியுறுத்தப்பட்டதா?

வடக்கும் கிழக்கும் இணைக்கப்படமாட்டாது. சமஸ்டி ஆட்சி முறை கிடையாது. ஒற்றையாட்சியே தொடர்ந்து பேணப்படும். பௌத்தத்திற்கே முன்னுரிமை ஏனைய மதங்களுக்குரிய சுதந்திரம் வழங்கப்படும் என்பதே புதிய அரசியலமைப்புக்குரிய அடிப்படை கோட்பாடுகளாகும். ஒற்றையாட்சி என்பதற்குப் பதிலாக ஏகிய ராஜ்ஜிய என்ற பதத்தைப் பயன்படுத்தி ஒற்றையாட்சியை ஒரு போதும் எந்த வகையிலும் பிரிக்க முடியாத ஆட்சி என்பதை அரச தரப்பினர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

ஏகிய ராஜ்ஜிய என்ற சிங்கள சொல்லுக்கு ஒருமித்த நாடு என்ற தமிழ்ப்பதத்தைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு சொற்களுமே நிலப்பரப்பு ரீதியாகவோ அல்லது சமஷ்டி என்ற நிர்வாக ரீதியாக அலகு ரீதியாகவோ நாட்டைப் பிரிக்க முடியாது என்பதை ஆழமாக வலியுறுத்துகின்றன.

சமஷ்டி ஆட்சி முறையென்றால் தமிழில் ஒன்றிணைந்த நாடு என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சிங்களத்தில் எக்சத் ராஜ்ஜிய என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். நிலவாரியாக இந்த நாட்டைத் துண்டாடுவதைத் தடுப்பதற்கு இது ஏற்புடையது. நிலவாரியாக நாட்டைத் துண்டாடி, தமிழர்களுக்கான தனிநாடு ஒன்றை, தமிழர்கள் உருவாக்கிவிடுவார்கள் என்ற அரசியல் ரீதியான அச்சத்தைப் போக்குவதற்கு ஒன்றிணைந்த நாடு என்ற அடிப்படையிலான ஆட்சி முறைமை உகந்ததாகும்.

ஆனால் பகிர்ந்தளிக்கபபட்ட இறைமை, வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதியுச்ச அதிகாரம் பகிரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கமைய, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்ற சக்தி வாய்ந்த தலைவராகிய இரா.சம்பந்தன் தமிழ் மக்களுடைய இறைமையை வலியுறுத்தினாரா என்பது தெரியவில்லை.

அவ்வாறு அவர் வலியுறுத்தியிருப்பாரேயாகில் ஏகிய ராஜ்ஜிய என்பதற்கும் பௌத்தத்திற்கே முன்னுரிமை என்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்க மாட்டாது.

ஒற்றையாட்சியின் இறைமை மீறல்

ஒற்றையாட்சி என்பது பேரின மக்களாகிய சிங்கள மக்களே மேலோங்கிய அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதை வலியுறுத்துவதாகும். ஒற்றையாட்சியின் கீழ் இப்போதுள்ள மாகாண ஆட்சிமுறையானது, அதன் உருவாக்கத்தின்போது அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாக இப்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அதியுச்ச அதிகாரப் பரவாலக்கல் வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர், புதிய அரசியலமைப்பில் அந்த ‘அதியுச்ச அதிகாரப் பகிர்வு’ என்பதற்கான வரைவிலக்கணம் எப்படி அமைய வேண்டும் என்பதை எந்த வகையில் உள்ளடங்கச் செய்திருக்கி;ன்றார் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

அதியுச்ச அதிகாரப் பகிர்வு எப்படி இருக்கும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படாவிட்டால் – அதிகுறைந்த அதிகாரப் பகிர்வானது என்ன என்பது குறித்து எதுவும் விவாதிக்கப்பட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டதா என்பதற்கான அடையாளங்களை, புதிய அரசியலமைப்புக்கான அடிப்படை விடயங்களைக் குறித்துக்காட்டியுள்ள இடைக்கால அறிக்கையில் காண முடியவில்லை.

எனவே, புதிய அரசியலமைப்பில் பெரும்பான்மையினராகிய சிங்கள மக்களுக்கே அதிகாரங்களைத் தாரை வார்த்துக் கொடுத்து, தமிழ் மக்களின் இறைமையை மீறுவது என்பது அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அரசியல் உரிமைக்காக அறுபது வருடங்களாகப்  போராடிய மக்கள் தமது இறைமையை இழப்பதன் மூலம் புதிய அரசியலமைப்பில் எந்தவிதமான அனுகூலங்களையும் பெற முடியாத நிலைமைக்கே தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஒற்றையாட்சியே புதிய அரசியலமைப்பிலும் தொடர்ந்திருக்கும் என்று அரச தலைவர்களில் ஒருவராகிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழுத்தி உரைக்கின்றார். பெயர்களிலும் சொற்களிலும் தொங்கிக் கொண்டிருப்பதில் பலனில்லை என தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒற்றையாட்சியுமல்ல சமஷ்டி ஆட்சியுமல்ல ஆனால், அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு வழி செய்யப்படுகின்றது என்று கூறுகின்றார்.

இறைமையின் வழியில் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்

ஒரேயொரு அரசியலமைப்பே உருவாக்கப்படவுள்ளது. அது ஒற்றையாட்சி முறையில் அமையும் என்பது அரசாங்கத் தரப்பினருடைய கருத்து, இல்லையில்லை பெயர்களில் பிரயோசனமில்லை. சமஷ்டி ஆட்சி முறைக்கு வழி செய்யப்பட்டுள்ளது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்தாகும். ஒற்றையாட்சியைக் குறிக்கின்ற யுனிட்டரி என்ற சொல்லே, ஏகிய ராஜ்ஜிய என்ற சிங்கள சொல்லின் மூலம் நீக்கப்படுகின்றது என்கிறார் சம்பந்தன். ஆனால் யுனிட்டரி என்ற ஆங்கிலச் சொல்லையே ஏகிய ராஜ்ஜிய என்ற சிங்கள சொல்லுக்குரிய சரியான சொல்லாகக் கொண்டுவருவதற்கான பேச்சுக்கள் நடைபெறுகின்றன என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இடைக்கால அறிக்கையிலேயே இத்தகைய நேர் முரண் நிலை என்றால், புதிய அரசியலமைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. எது எப்படியாயினும், இடைக்கால அறிக்கை தமிழ் மக்களை மட்டுமல்லாமல் சிங்கள மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தத் தக்க வகையிலேயே வெளியிடப்பட்டிருக்கின்றது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியல் பயணம் என்பது நீண்டது. இதில் பல படிமுறைகளைக் கடக்க வேண்டியிருக்கின்றது. எனவே, இந்த பயணத்திலும், படிமுறைகளிலும் தமிழ் மக்களின் இறைமையை உறுதி செய்து அதன் அடிப்படையில் அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் அங்கம் பெற்றுள்ள அரசியல் ரீதியாக சக்தியைக் கொண்டுள்ள கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனின் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும். அவர் அதனை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும்.

Leave a comment