மாவோயிஸ்கள் குழந்தைகளை தாக்குதலுக்கு பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும் – அன்டோனியோ குட்ரெஸ்

327 0

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பினர் குழந்தைகளை பயன்படுத்தி வருவதாக ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார்.

குழந்தைகள் ஆயுதங்கள் ஏந்துவது தொடர்பான அறிக்கையை ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்ரெஸ் தயாரித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசுக்கு எதிரான சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பினர் குழந்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்த அறிக்கை ஐ.நா.,வுக்கு கிடைத்துள்ளது. அங்கு நடக்கும் மோதலால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். காஷ்மீரில் பதற்றம் ஏற்படும் போதும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

இந்திய அரசின் அறிக்கைப்படி, காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 30 பள்ளிகளுக்கு தீவைத்தனர். நான்கு பள்ளிகளை ராணுவ பயன்பாட்டுக்காக பாதுகாப்பு படையினர் பல வாரங்கள் பயன்படுத்தியுள்ளனர்.

குழந்தைகள் மாவோயிஸ்டுகள் அமைப்பில் சேர்வதை தடுக்க இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எற்கனவே அந்த அமைப்புகளில் இணைந்திருக்கும் குழந்தைகளை பத்திரமாக மீட்கும் நடவடிக்கைகளையும் உடனடியாக  மேற்கொள்ள வேண்டும்.

சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளின் பின்னணியில் எந்தவொரு வன்முறையிலிருந்தும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசை வலியுறுத்துகிறேன். மாவோயிஸ்டுகள் அமைப்புகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.

மாவோயிஸ்ட் அமைப்புகளில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளை தகவல் அளிப்பவர்களாக போலீசார் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இருப்பினும் சில கட்டுப்பாடுகளின் காரணமாக இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment