மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள்

372 0

அரச கொள்கைத்திட்டங்களுக்கு அமைய மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் உள்ளிட்ட குழுவினரை யாழ்ப்பாணத்தில் நேற்று சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த தூதுக் குழு வடக்கு பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமது பங்களிப்பை செலுத்த தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் வடக்கின் அபிவிருத்திக்காக முறையான பங்களிப்பை பெற்றுக்கொடுக்க எதிர்ப்பாரத்திருப்பதாக தூதுக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு மேலதிகமாக இந்திய மற்றும் சீன நிறுவனங்கள் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

குறித்த திட்டம் தொடர்பான கேள்விக்கோரல்கள் கடந்த மாதம் இடம்பெற்றது.

இதையடுத்து ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிதி வழங்குநர் என கிட்டத்தட்ட 13 நிறுவனங்கள் இந்தத் திட்டத்துக்கு ஆர்வம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தரப்பினர் தமது திட்டமுன்மொழிவுகளை சமர்ப்பிக்க 41 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதையடுத்து பொருத்தமான ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிதி வழங்குநர் தெரிவு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீதி அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளது.

300 மில்லியன் அமெரிக்க டொலர் நீதி ஒதுக்கீட்டில் இடம்பெறவுள்ள இந்த் திட்டத்துக்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதான வீதிகள் மாகாண வீதிகள் மற்றும் பிரதேச சபை வீதிகளும் இந்தத் திட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தகவல் வெளியிட்டார்.

 

Leave a comment