ஹம்பாந்தோட்டை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – 28 பேர் விளக்கமறியலில்

236 0

ஒன்றிணைந்த எதிரணியினரால் ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கைதுசெய்யப்பட்ட 6 பெண்கள் உட்பட 28 பேரும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, நேற்றிரவு 10 மணியளவில் ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோதல் சம்பவம் இடம்பெற்றபோது, அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தநிலையில் காயமடைந்த 4 காவல்துறையினர் ஹம்பாந்தோட்டை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹம்பாந்தோட்டை – மத்தள விமான நிலையத்தை நீண்டகால குத்தகை அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஒன்றிணைந்த எதிரணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராலயத்தில் கோரிக்கை மனு ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக அங்குள்ள எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a comment