Breaking News
Home / ஆசிரியர் தலையங்கம் / சிறுவர்களின் பாதுகாப்பில் எமக்கான கடமை என்ன?

சிறுவர்களின் பாதுகாப்பில் எமக்கான கடமை என்ன?

மனித உரிமை பாதுகாப்பு, மனித உரிமைச் சட்டம், மனித உரிமை மீறல் என நாளந்தம் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இவற்றில் மிக அதிர்ச்சியான விடயம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஆகும். மனித குலத்தின் அறிவியல் ஆழப்பரந்து விரிந்து கொண்டிருக்கையில் மனித நேயம் குறுகிக் கொண்டேயிருக்கின்றது.

சிறுவர் உரிமைகளிலிருந்தே மனித உரிமைகள் தோற்றம் பெற்றுள்ளன. சிறுவர் உரிமைகள் என்றால் சிறுவர்களுக்கு சிறப்பானதும் பாதுகாப்பானதுமான வாழ்க்கை , போசாக்கான உணவு, கல்வி , சுகாதாரம், போன்றன உறுதிபடுத்தப்படுத்துதல் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளாகும்.

யுத்தங்களின் போது சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர். இது சர்வதேசம் எங்கும் நடந்தேறுகின்றது. இது அரசியல் இராணுவ ஆக்கிரமிப்புகளின் விளைவாக நிகழ்கின்றன. அதே வேளை சிறுவர்கள் மீதான வன்முறை அவர்களை பாதுகாக்க வேண்டிய உறவுகளாலேயே பெரும்பாலும் நடைபெறுகின்றது. அதை எண்ணி மனித குலமே வெக்கி தலைகுனிய வேண்டும்.

நாளுக்கு நாள் சிறுவர்களுக்கு எதிராக துஷ்பிரயோகங்கள், பாலியல் வல்லுறவுகள் , கொடூர கொலைகள், சிறுவர் தொழிலாளர்கள் , சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்துதல் , கடத்துதல் , பெற்றோரிடம் இருந்து பிரித்தல், பெற்றோரே பிள்ளைகளை பணத்திற்காக விற்றல் என பல்வேறு வடிவங்களில் மிகவும் மோசமான சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையால் 1989 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் ஓக்டோபர் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய நாளே உலக சிறுவர் தினமாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் , யூன் மாதம் 12ஆம் திகதி சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான தினமாகவும் ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஜ.நா சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் 1989 ஆம் ஆண்டில் ஜ.நா பொதுச்சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்படி 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரும் சிறுவர், சிறுமியர் ஆகக் கணிக்கப்படுவர்.

சிறுவர்களை பாதுகாப்பது எம் தலையாய கடமை. தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. சிறுவர்களுக்கு எதிராக துஷ்பிரயோகங்கள் மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரணதண்டனையும் வழங்கி சிறுவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாத்தனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு செஞ்சோலை, காந்த ரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்கள் அமைத்து சிறுவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் சிறுவர்களின் நலனின் பிரேத்தியேக கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.” என தேசியத்தலைவர் கனவு கண்டார். தனது கனவை வன்னி பெரு நிலப்பரப்பில் நிஜமாக்கியும் காட்டினார்.

உலகலாவிய ரீதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாது ஒழிந்து அவர்கள் பாதுகாப்பாக வாழ நாம் எல்லோரும் வழிசெய்வோம்.

 

About ஸ்ரீதா

மேலும்

கிராமங்களில் இருந்து அரசை நோக்கி…!

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை மக்களின் அடிப்படை உரிமை ஆகும். அந்த வகையில் தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினம் …