ஆஸ்பத்திரி பக்கமே செல்லாத 101 வயது கேரள மூதாட்டி

1189 0

கேரளாவில் வசித்து வரும் 101 வயது மூதாட்டி சாரம்மாள் இதுவரை ஆஸ்பத்திரி பக்கமே போனதில்லை என்று அவரது உறவினர்கள் கூறினர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மூணாறு செல்லும் சாலையில் முல்லைபெரியார் அணை அருகே வசித்து வந்தவர் பைலி. இவரது மனைவி சாரம்மாள் (வயது 101) சாரம்மாளின் கணவர் பைலி கடந்த 1962-ம் ஆண்டு இறந்து விட்டார்.

அதன்பின்னர் சாரம்மாள் மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோருடன் வசித்து வருகிறார். சாரம்மாள் எள்ளு, கொள்ளு பேரக்குழந்தைகளுக்கு பழங்கதைகள், ராஜா கால வீரக்கதைகள் கூறி வருகிறார்.

தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். தனது வேலைகளை தானே செய்து கொள்கிறார். செய்தி தாள்களை தினந்தோறும் படித்து வருகிறார். சிறிய எழுத்துக்கள் மட்டும் தெரிவதற்காக கண்ணாடி அணிந்து கொண்டு படிக்கிறார். சாரம்மாள் இதுவரை ஆஸ்பத்திரி பக்கமே போனதில்லை என்று அவரது உறவினர்கள் கூறினர்.

உடல் ஆரோக்கியம் குறித்து மூதாட்டியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

உணவு பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் காரணமாகவே நான் இன்றும் ஆரோக்கியத்துடன் இருக்க காரணம். மேலும் கடந்த கால கவலைகளை சுமந்து கொள்ளமாட்டேன். எதிர்காலம் குறித்து அச்சப்படமாட்டேன். இருக்கும் நாள் உண்மை என்று நினைத்தேன். 101 வருடம் மகிழ்ச்சியோடு வாழ்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் இதே உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வேன் என்றார்.

Leave a comment