இலங்கைக்கு திரில் வெற்றி

449 0

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரின் சேக் சைட் மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்த 419 ஓட்டங்களை பெற்றது.

இதில், இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமால் 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பதிலளித்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 422 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டையும் இழந்தது.

பந்து வீச்சில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 138 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில் 136 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதன் போது, சிறப்பான பந்து வீச்சில் ஈடுபட்ட ரங்கன ஹேரத் 6 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

அதன்படி, இந்த போட்டியில் ரங்கன ஹேரத் மொத்தமாக 11 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

தில்ருவன் பெரேரா 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி, இலங்கை அணி 21 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது.

இதேவேளை, இரண்டு இன்னிங்ஸ்களிலும் 11 விக்கட்டுகளை வீழ்த்திய ரங்கன ஹேரத், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கட்டுகளை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

மேலும், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் 400 விக்கட்டுக்களை வீழ்த்தியது இதுவே முதன்முறையாகும்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக 11 விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கையை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்ற ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a comment