மகளுக்காக தினமும் 12 கி.மீ நடக்கும் ஏழை தாய்

301 0

mom-1சுவிட்சர்லாந்து நாட்டில் பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் 6 வயது மகளை அழைத்துக் கொண்டு தாயார் தினமும் 12 கி.மீ தூரம் நடந்து பள்ளியில் சேர்த்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Epalinges என்ற நகரில் தான் இந்த உருக்கமான நிகழ்வு தினமும் நடந்துவருகிறது. இதே நகரில் கணவன் இல்லாத தாய் ஒருவர் தனது 6 மற்றும் 4 வயது மகள்களுடன் வசித்து வருகிறார்.

நீனா என்ற பெயருடைய அந்த தாயாரின் 6 வயது மகள் சுமார் 1.4 கி.மீ தூரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்று வருகிறாள். ஆனால், பள்ளியின் விதிமுறைப்படி 2.5 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ளவர்களுக்கு மட்டுமே பேருந்து வசதி செய்து தரப்படும்.

இதன் காரணமாக நீனாவின் மகளை பள்ளி பேருந்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. நீனாவின் குடும்பம் வறுமையில் உள்ளதால், அவரிடம் கார் உள்ளிட்ட எந்த வாகனமும் இல்லை.எனினும், மகளின் கல்வி முக்கியம் என எண்ணிய நீனா தினமும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்துச் சென்று மகளை பள்ளியில் சேர்த்துவிட்டு வீடு திரும்புகிறார்.

காலையில் நடந்துச் சென்று பள்ளியில் சேர்ப்பது. பின்னர், பிற்பகல் நேரத்தில் நடந்துச் சென்று மகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவது தான் நீனாவின் அன்றாட முக்கியப் பணியாகும்.

அதாவது, தினமும் நீனா 12 கி.மீ தூரம் நடந்துச் சென்று வருகிறார். நீனாவுடன் அவரது 4 வயதான இளைய மகளும் நடந்து சென்று வருகிறாள்.

இது குறித்து நீனா பேசுகையில், ‘இந்த பகுதியில் பள்ளி பேருந்து வராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனினும், எனது மகளின் கல்வி முக்கியம் என்பதால், தினமும் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

இதே நகரில் பேருந்து வசதி இல்லாமல் மாணவர்கள் அவதியுற்று வருவதால், பேருந்து வசதியை ஏற்படுத்த இப்பகுதியை சேர்ந்த பள்ளி செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.