100 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும்; பாக். வெளியுறவு துறை மந்திரிக்கு தீவிரவாதி ஹபீஸ் சையத் நோட்டீஸ்

781 0

அமெரிக்காவின் டார்லிங் எனக்கூறிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஆசிப், தனக்கு 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தீவிரவாதி ஹபீஸ் சையத் தெரிவித்துள்ளான்.

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக நுழைந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவன் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன்.

தற்போது ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளது.

இதற்கிடையே, நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி கவாஜா ஆசிப், ”தீவிரவாதி ஹபீஸ் சயீத் எங்களுக்கும் பெரும் சுமைதான். ஹக்கானி நெட்வொர்க் மற்றும் ஹபீஸ் சயீத் போன்ற தீவிரவாதிகளுக்காக எங்களைக் குறை சொல்ல வேண்டாம். கடந்த 20 – 30 ஆண்டுகளுக்கு முன்பு ஹபீஸ் சயீத் போன்ற தீவிரவாதிகள் அமெரிக்காவிற்கு ‘டார்லிங்’காகதான், செல்லப்பிள்ளையாகத்தான் இருந்தார்கள்” என்று ஆவேசமாகப் பேசினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி கவாஜா ஆசிப் மீது, 100 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஹபீஸ் சையத் தெரிவித்துள்ளான்.

இதுதொடர்பாக, ஹபீஸ் சையத்தின் வழக்கறிஞர் தோஹர் கூறுகையில், நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி, எனது கட்சிக்காரரை அமெரிக்காவின் டார்லிங் என கூறியுள்ளார். இது எனது கட்சிக்காரரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. எனவே அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும். மேலும், எனது கட்சிக்காரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் அதற்கு நஷ்ட ஈடாக 100 மில்லியன் ரூபாய் தரவேண்டும் என வெளியுறவு துறை மந்திரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன் ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாதியாக அறிவித்து உள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment