விடுதலைப் புலிகளின் அழிவிற்கு வழிவகுத்த த.தே.கூட்டமைப்பு – ஆனந்தசங்கரி

695 0

புலிகள் உருவாக்கிய கட்சியின் பெயரால் புலிகளையே அழித்தவர்கள் என மூத்த அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது,
மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சர்வதேசம் வழங்கிய நாமம்.

இந்தப் பெயரினை வைத்தவர்களே விடுதலைப் புலிகள்தான் என்று திலீபனின் நினைவு நாள் நிகழ்வில் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் அழிவிற்கு வழிவகுத்தவர்களே இவர்கள்தான்.

2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் துணையுடன் 22 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், 2009ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் கைவிட்டு விலகி நின்று வேடிக்கை பார்த்தனர்.

இளைஞர்கள் அணிதிரண்டு விடுதலைப் புலிகளின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்த இவர்களின் முக்கிய தலைவர் ஒருவர் தனது மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இவ்வாறானவர்களின் உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்டு புலிகளின் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர், யுவதிகள் இன்று சிறையிலும், தங்கள் உடல்களின் குண்டுச் சிதறல்களைத் தாங்கியும், அங்கவீனர்களாகவும் சொல்லொணாத் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர்.

யுத்தத்தில் கிளிநொச்சி வீழ்ந்த பின்னர் இந்தியாவில் இருந்து கொழுப்பிற்கு வருகை தந்த இதே பிரமுகர் ‘மண்ணை இழந்தாலும் ஈழப் போராட்டம் தொடரும்’ என்று கூறி உசுப்பேத்திவிட்டு மீண்டும் இந்தியா சென்றுவிட்டார்.

இறுதிக் கட்டப் போரில் இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவ்சங்கர் மேனன் டெல்லிக்கு அவசரமாக அழைத்தபோதும் அதனைத் தட்டிக் கழித்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக யுத்த நேரத்தில் தமிழகத்தில் எமது தொப்புள் கொடி உறவுகள் 18 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் யுத்தத்தை நிறுத்துங்கள் என்று இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதை எல்லாம் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்று இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால் ஒரு உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தால், தாய்த் தமிழகமே அணிஅணியாகத் திரண்டு வந்து ஆதரவு கொடுத்திருப்பார்கள்.

யுத்தம் ஒரு முடிவிற்கு வந்திருக்கும் இதை ஏன் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட எவரும் செய்ய முன் வரவில்லை? இன்று எல்லாவற்றிற்கும் முன்நின்று ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் முன்னாள், இன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்று தமிழ் மக்களின் அழிவைத் தடுப்பற்கு ஏன் முயற்சிக்கவில்லை? எல்லாம் முடிந்தபின் இது புலிகள் பெயரிட்ட கட்சி என்று மீண்டும் புலிகளின் பெயரைச் சொல்லி வாக்குகள் சேகரித்து, பதவிக்கு வருவதற்கு ஆசைப்படுகின்றார்கள்.

புலிகள் பெயரிட்ட கட்சியைக் காப்பாற்ற முயற்சிக்கும் இவர்கள்; அன்று ஏன் புலிகளையும் மக்களையும் காப்பாற்ற முன்வரவில்லை என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment