ஜெயலலிதா மரணம் பற்றி மருத்துவ அறிக்கை: தலைவர்கள் கிளப்பும் சந்தேகங்கள்

1352 0

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கிளப்பும் சந்தேகங்களை பார்ப்போம்…

தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி வெளியிட்டிருந்த அறிக்கையில் நீரிழிவு நோய்க்கு ஜெயலலிதா சரியாக சிகிச்சை எடுத்து கொள்ளாமல் இருந்தது தெரியவருகிறது. கை, கால் வீக்கத்துடன் மயங்கிய நிலையில் ஜெயலலிதா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டதும் தெரியவந்துள்ளது.

அப்படியானால் போயஸ் கார்டன் வீட்டில் அவரை மருத்துவர்கள், உடன் இருந்தவர்கள் சரிவர கவனிக்க வில்லையோ என்ற ஐயப்பாடும் எழுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவறாமல் மாத்திரை சாப்பிடுவது வழக்கம். அப்படி இருக்கும்போது ஜெயலலிதாவுக்கு திடீரென சர்க்கரை அளவு அதிகரித்தது எப்படி? என்ற கேள்வி எழுகிறது. அப்படியானால் அவரை யாரும் கவனிக்க வில்லையா?

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவரது கட்சியினர் அனைவரும் ஒன்றாக ஒரே மாதிரியாக பேட்டி கொடுத்தனர். இப்போது மாறி மாறி பேசுகின்றனர். இந்த சமயத்தில் விசாரணை கமி‌ஷன் அமைத்திருக்கிறார்கள் என்றால் யார் மீது பழி போடுவதற்கு என்று தெரியவில்லை. இதுபற்றி சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று எங்கள் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளார். அதையே இப்போதும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தனது டுவிட்டர் பக் கத்தில் கூறி இருப்பதாவது:-

ஜெயலலிதா உடல்நிலை பாதிப்புகள் குறித்து ஆரம்ப நிலையிலேயே கண்காணிக்காதது வருத்தம் அளிக்கிறது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந்தேதி ஜெயலலிதா சரியான மனநிலையில் இருந்துள்ளார்.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்படாதது கவலை அளிக்கிறது. உடனடியாக ஆக்சிஜன் தரப்பட்டிருந்தால், மூச்சுத் திணறலைத் தவிர்த்திருக்கலாம். சர்க்கரை அளவு 508 எம்.ஜி. வரை செல்ல அனுமதிக்கப்பட்டது ஏன்? ஏன் இந்த அபாய கட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது கவலை அளிக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கு என தமிழக அரசு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. 3 மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு செய்தி குறிப்பு கூறுகிறது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து எனது மக்களிடம் எழுந்துள்ள சந்தேகத்தை தெளிவுப்படுத்துவதற்கு இந்த விசாரணை ஆணையம் அவசியமானதுதான். ஆனால் இந்த ஆணையத்தின் விசாரணை எல்லை எது வரை என்பது தெளிவு படுத்தப்படவில்லை.

வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவ மனையில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள், ஜெயலலிதாவை நேரில் வந்து பார்வையிட்ட மத்திய மந்திரிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த பா.ஜனதாவின் முன்னணி தலைவர்கள், தமிழக கவர்னர் ஆகியோரையும் இந்த ஆணையம் விசாரணை நடத்துமா? என்பதுதான் நம்முன் எழுந்துள்ள கேள்வியாகும். எனவே விசாரணைக்கான எல்லைகளையும் கால அவகாசம் போதுமானதா? என்பதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு நிமோனியா இருந்திருக்கலாம் என்று தான் மருத்துவ அறிக்கையில் உள்ளது. ஆனால் அவர் நிமோனியாவால் பாதிக்கப்படவில்லை. ஜெயலலிதா கவனிக்கப்பட்ட விதம் அவருக்கும் நனறாகவே தெரியும். அதற்கு முந்தைய நாள் வரை அவர் தலைமை செயலகத்துக்கு சென்று வந்துள்ளார்.

இதில் என்னிடம் பல கேள்விகள் கேட்பதை விட ராமமோகன் ராவிடம் கேட்டால்தான் சரியாக இருக்கும். அவர்தான் அப்போது அரசின் தலைமை செயலாளர். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது அவர்தான் கூடவே இருந்தார். நான் அன்று அங்கு இல்லை. ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்ட போது 3 ஆம்புலன்சுகளை அழைத்துள்ளனர். எது வேகமாக வந்ததோ அந்த ஆம்புலன்சில் எடுத்துச் சென்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment