வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது(காணொளி)

1534 0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய ட்ரயல் அற் பார் நீதாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண மேல்நீதிமன்ற கட்டத்தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த ட்ரயல் அற் பார் முறையிலான விசாரணை முடிவில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 7 பேருக்கு, மரண தண்டனையுடன், 30 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தும், அத்துடன் வித்தியா குடும்பத்தினருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்போது 40 ஆயிரம் ரூபா தண்டப்பணமோ, அல்லது 10 இலட்சம் ரூபா இழப்பீட்டுப் பணமோ செலுத்தத் தவறின் மேலதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

2ஆம் எதிரி இரவி மாமா எனப்படும் பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3ஆம் எதிரி செந்தில் எனப்படும் பூபாலசிங்கம் தவக்குமார், 4ஆம் எதிரி சசி எனப்படும் மகாலிங்கம் சசீந்திரன், 5ஆம் எதிரி சந்திரா எனப்படும் தில்லைநாதன் சந்திரகாசன், 6ஆம் எதிரி பெரியாம்பி எனப்படும் சிவதேவன் துசாந்தன், 8ஆம் எதிரி கண்ணணன் எனப்படும் ஜெயந்திரன் கோகுலன், 9ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கூட்டுக் கடத்தல், கூட்டு வன்புணர்வு, கூட்டுக் கொலை ஆகியவற்றிற்கான சதித்திட்டம் தீட்டியமை, தீட்டிய சதித்திட்டத்திற்கு இணங்க கூட்டுக் கடத்தல், கூட்டு வன்புணர்வு, கூட்டுக் கொலை என்பவற்றை நிறைவேற்றியமை, சதித்திட்டத்தில் பங்குபற்றி உடந்தையாக இருந்தமை போன்ற காரணங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1ஆம் எதிரியான சின்னப்பா எனப்படும் பூபாலசிங்கம் இந்திரகுமார், 7ஆம் எதிரியான நிசாந்தன் எனப்படும் பழனி நிருபசிங்கம் குகநாதன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என நீதாய மன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

இன்றைய நீதாய மன்ற அமர்வு காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
நீதாய மன்றின் அமர்வில் முதலில் வவுனியா மேல் நீதிமன்ற நீதபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், அரச தரப்பு சாட்சிகள் மற்றும் எதிரி தரப்பு சாட்சிகள் ஆகியோரின் சாட்சியங்களை வைத்து ஒப்புநோக்கி சம்பவங்களின் பின்புலங்களையும், சான்றாதாரங்களையும் விளக்கி இரு மணித்தியாலங்கள் விளக்கவுரை வழங்கினார்.

விளக்கவுரையில் அரச தரப்பு சாட்சிகளின் வலிதான தன்மையையும், எதிரி தரப்பு சாட்சிகளின் சாட்சியங்கள் முரண்பட்டு நிரூபிக்கப்படாமையையும் விளக்கினார்.

இதற்கமைய, இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளின் சாட்சிகளை நீதாயமன்று ஏற்றுக்கொள்கிறது என்றும் தெரிவித்தார்.
இக்குற்றச்செயல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒளிப்பதிவு செய்யப்பட்டு அது பின்னர் அனுப்பப்பட்டது என்று கூறிய சாட்சியமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஒவ்வொரு எதிரிக்கும் எதிரான சாட்சியங்களையும் மன்று ஆராய்ந்தது.அவ்வாறே ஒவ்வொரு எதிரியினது சாட்சியங்களையும் மன்று ஆராய்ந்தது.
அவ்வாறு ஆராய்ந்து சாட்சிகளின் சாட்சியங்களை மன்று ஏற்றுக்கொண்டது. குறிப்பாக சட்ட வைத்திய நிபுணரின் சாட்சி, குற்றச்செயல் நடத்தப்பட் கொடூரத்தன்மையை வெளிப்படுத்தி நிற்கிறது.

இதேவேளை, 9ஆம் எதிரி சுவிஸ்குமார் ஏதோ ஒரு வகையில் தப்பிச் சென்றுள்ளார்.இவ்வாறு பல முக்கிய வி;டயங்களை வவுனியா மேல் நீதிமன்ற நீதபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தனது விளக்கவுரையில் சுட்டிக்காட்டினார்.அத்துடன் இலங்கையில் முன்னர் நடைபெற்ற பல குற்றவியல் வழக்குகளின் தீர்ப்புக்களையும், வியாக்கியானங்களையும் நீதிபதி சசி மகேந்திரன் முன்னுதாரணமாக வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து நீதாய மன்றத்தின் மற்றைய அங்கத்தவரான திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதபதி அன்லிங்கம் பிரேமசங்கர் தான் தனது சகோதர நீதிபதியின் தீர்ப்பையும், வியாக்கியானங்களை முழுமையாகவும், ஏகமனதாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதனையடுத்து தீர்ப்பாய மன்றத்தின் மற்றைய உறுப்பினரான யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், தனது சகோதர நீதிபதிகளின் தீர்ப்பையும், வியாக்கியானங்களையும் முழுமையாகவும், ஏகமனதாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் அதேவேளை, தன்னிடமும், 305 பக்கங்கள் நிறைந்த விளக்கவுரை ஒன்று இருப்பதாகக் கூறி தான் அதனை அரை மணித்தியாலயத்தில் சுருக்கமாக வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அவருடைய விளக்கவுரையில் சர்வதேச நீதிமன்றத் தீர்ப்புக்கள், சர்வதேச யுத்தக்குற்றத் தீர்ப்புக்கள், யுத்த நீதிமன்றச் சட்டத்தீர்ப்புக்கள், இலங்கையின் கடந்த கால உயர்நீதிமன்றத் தீர்;ப்புக்கள் அனைத்தும் அலசி ஆராயப்பட்டிருப்பதாகவும் இளஞ்செழியன் தெரிவித்தார்.
செம்மணியில் மாணவி கிருசாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்ட ட்ரயல் அற் பார் வழக்கின் தீர்ப்பு உட்பட இலங்கையின் பல ட்ரயல் அற் பார் தீர்ப்புக்களும் அலசி ஆராயப்பட்டிருப்பதாகவும் இளஞ்செழியன் தெரிவித்தார்.

இதேவேளை, வித்தியா படுகொலையின் கொடூரமான பரிமாணங்களைத் தெளிவுபடுத்திய நீதிபதி இளஞ்செழியன், இந்த சதித்திட்டத்தின் வில்லனாக சுவிஸ்குமாரை விபரித்ததுடன், இச்சதித் திட்டத்தைப் புலனாய்வு செய்து நீதியான தீர்ப்பு எழுதப்படுவதற்கு வழி வகுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் பரிசோதகர் நிசாந்த சில்வாவை கதாநாயகன் என்றும் பாராட்டினார்.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் குணரட்ணம் ட்ரயல் அற் பார் வழக்கை நிதானமாக வழிநடாத்தியதையும்; அவர் பாராட்டினார்.

தொடர்ந்து குற்றமற்றவர் எனக் காணப்பட்டவர்கள் இருவரும் குற்றவாளிக் கூண்டிலிருந்து விடுவிக்கப்பட, குற்றவாளிகளாகக் காணப்பட்ட 7 பேரும், அவர்களுக்கு ஏன் மரண தண்டனை விதிக்கக் கூடாது என்ற கேள்விக்கு விடையளிக்குமாறு கோரப்பட்டனர்.
அவர்களில் பலரும் கண்ணீர் சிந்தியபடி வித்தியா மீதான வன்முறை, கொலை முதலிய குற்றச்செயல்களுக்கும், தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும், குற்றவாளிகள் வெளியே இருக்க சுற்றவாளியான தாங்கள் தண்டிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், கண்கண்ட சாட்சிகள் என்று பொலிஸாரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும், கட்டியெழுப்பிய சாட்சிகள் கண்கெட்ட சாட்சிகள் என்றும் தெரிவித்தனர்.

அப்பாவிகளான தமக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதன் மூலம் கொல்லப்பட்ட மாணவியான வித்தியாவிற்கும் நீதி வழங்கப்படவில்லை என்றும், தங்களுக்கும் நீதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.தொடர்ந்து அவர்களது பதில்கள் நீதிமன்ற ஏட்டில் பதிவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற அமர்வில் பங்குபற்றிய அனைவரும் எழுந்து நிற்க மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.

இலங்கையில் அதிமேதகு ஜனாதிபதி தீர்மானிக்கும் ஒரு திகதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும், அவர்களது உயிர் பிரியும்வரை தூக்கிலிடப்படுவர் எனும் தீர்ப்பிற்கு நீதாய மன்ற நீதிபதிகள் கையெழுத்திட்டு நீதாய மன்றின் வழக்கு விசாரணையை முடிவுறுத்தி வெளியேறினார்.
தீர்ப்புகளின் பின்னர் நீதிமன்றிற்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட எதிரிகள் தரப்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்தனவிடம் உங்களது அடுத்த நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர்கள் வினவியபோது, இது தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்ததுடன், ஊடகங்களிடம் இந்தத் தீர்ப்பை தான் விமர்சிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, நீதிமன்றத்திற்கு வெளியே கருத்து வெளியிட்ட வித்தியாவின் தாயார் தனது மகளின் வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதாகவும், இது நீதிக்குக் கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, புங்குடுதீவு மாணவியான வித்தியா சிவலோகநாதன் கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment