ஜெ. மரணம் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதால் எதுவும் சொல்ல முடியாது – டி. ஜெயக்குமார்

309 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் இப்போது அதுகுறித்து எதுவும் சொல்ல இயலாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

’தமிழர் தந்தை‘ சி.பா ஆதித்தனாரின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார், மா.பா பாண்டிய ராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை போக்குவதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், எல்லா விபரங்களும் தெரிவிக்கப்படும். மாநில அரசு அமைத்துள்ள இந்த விசாரணை ஆணையம் சிறப்பாக செயல்படும்.

சி.பா ஆதித்தனாரின் சிலையை சுற்றி பூங்கா அமைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

தமிழர் தந்தை பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து தாய்மார்களும் தங்களது குழந்தைக்கு தமிழ் அறிவை கொடுக்கும் விதமாக தமிழ் நாளிதழ்களை வாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.என ஜெயக்குமார் கூறினார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது அவரை சந்தித்தது குறித்து அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தது தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “விசாரணை ஆணையம் அமைக்கும் முன்பாக இது தொடர்பான கேள்விகள் கேட்டிருந்தால் பதிலளித்து இருப்பேன். ஆனால், தற்போது விசாரணை
ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் இது குறித்து எதுவும் தெரிவிக்க முடியாது.” என கூறினார்.

Leave a comment