வவுனியாவில் கிராமம் ஒன்று புல்லால் ஆக்கிரமிக்கப்படும் நிலைமை (காணொளி)

13006 0

வவுனியா மகிழங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட விளக்கு வைத்த குளம் கிராமத்தில் கினிப்புல் எனப்படும் ஒரு வகை புல் கிராமத்தில் அனைத்து இடங்களிலும் மிக வேகமாக பரவி வருகின்றது.

1996 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இக் கிராமத்தில் காணாப்படாத இப்புல் வகை மக்கள் இடம்பெயர்ந்து சென்றதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீள் குடியேறியபோது கிராமத்தை முழுமையாக இப்புல் ஆக்கிரமித்திருந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடைப்பட்ட சூனியப்பிரதேசமாக காணப்பட்ட இக் கிராமத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இப்புல்லினை வளர்த்திருக்கலாம் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இப்புலிலின் அதிக வளர்ச்சியால் விவசாய செய்கைகள் மேற்கொள்ள முடியாதுள்ளதுடன் யானைகள் மற்றும் காட்டு மிருகங்களின் அட்டகாசமும் இக் கிராமத்தில் அதிகமாக உள்ளதாக இக்கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மனிதர்களை மறைக்கும் அளவிற்கு உயரமாக வளரக்கூடிய இப்புல்லால் திருடர்களின் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் பாடசாலைக்கு செல்லும் சிறுவர் சிறுமியர்களின் பர்காப்புக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த புல்லில் உள்ள ஒருவகை உண்ணி சிறுவர்களில் பரவுவதால் அவர்களுக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

விசமிகளால் இப்புல்லிற்கு தீ வைத்தால் தமது வளவுகளில் உள்ள பயன்தரு பயிர்கள் அழிவடைவதாகவும் அப்புல்லினை அழித்தாலும் மிக வேகமாக மீண்டும் மீண்டும் வளர்ந்து தமது கிராத்தை முழுமையாக ஆக்கிரமித்து வருவதாக இக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment