வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதே எனது விருப்பம்- மனோ கணேசன்

324 0

நாட்டில் சிறுபான்மையினரின் தேசிய பிரச்சினைகள் என்னவென்பது குறித்து தனது பார்வையினை சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் இன்று (16) யாழ்ப்பாணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி, வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி தீர்வு மற்றும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்படல் என்பதுவே தன்னுடைய யோசனைகள் எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

தற்போதுள்ள இந்த வாய்ப்புக்களை தவறவிட்டதன் பின்னர், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் வைத்து நழுவ விட்ட வாய்ப்புக்களை பற்றி கவலையடையக் கூடாது என்பதே எனது யோசனையாக உள்ளதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் அரசசார்பற்ற நிறுவனங்களை சகவாழ்வுப் பாதையில் இணைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (16 ) இடம்பெற்றுள்ளது. இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு விடயங்கள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன.  அரசியல் கட்சிகள் சில தமது யோசனைகளை எழுத்து மூலம் தந்துள்ளன. அரசியலமைப்பின் வழிகாட்டல் குழு முழுவதனையும் தொகுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவைக்கு வழங்க வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த நாடு சமஷ்டி நாடாக அறிவிக்கப்பட வேண்டும். மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. ஆனால் நடைமுறையில் அதற்கான சாத்தியமில்லை.

Leave a comment