நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதா?: மு.க.ஸ்டாலினை இளைய சமுதாயம் மன்னிக்காது – தமிழிசை

291 0

நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்களை தமிழகத்தின் இளைய சமுதாயம் மன்னிக்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வியையும், பள்ளிகளையும் எதிர்க்கும் அளவிற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்களும் ஒரு எதிர்மறை அணுகுமுறையை கொண்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏழைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டிய இந்த காலகட்டத்தில் இந்தி திணிக்கப்படும் என்று இல்லாத கதையை சொல்வது, எப்படிப்பட்ட பள்ளிகளை ஏழைகளுக்கு கிடைக்காமல் தடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சர்வ வசதி கொண்ட கல்வி கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்கள் முயல்கிறார்களா?. இதை தமிழகத்தின் இளைய சமுதாயம் மன்னிக்காது. நவோதயா போன்ற இத்தகைய பள்ளிகள் மாவட்டத்திற்கு ஒன்று அமைக்க மத்திய அரசு கொடுக்கும் நிதி ரூ.20 கோடி. இதை வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா?.

ஆக, தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கிடைக்கும் தரமான கல்வி, தவறாமல் ஏழை கிராமத்து குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பொய்முகம் காட்டுகிறார்கள். உண்மையாக கிராமப்புற மாணவர்களுக்காக இவர்கள் ஆதங்கப்படுகிறார்கள் என்றால் நவோதயா பள்ளிகளை இவர்கள் ஆதரிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குழந்தைகளும், பெண் குழந்தைகளும், கிராமத்து குழந்தைகளும் தரமான கல்வியை பெறக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறாரா?. இதில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு என்று தனி இட ஒதுக்கீடும் உள்ளது.

இவ்வளவு நல்ல கல்வியை ஓர் மாநிலம் மறுக்க முடியுமா? அப்படி என்றால் இங்குள்ள அரசியல்வாதிகள் எவ்வளவு சுயநலவாதிகள் என்பதை தமிழக மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தத்தளிக் கும் பெற்றோர்களே இவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

அனைத்து மாநிலங்களும் இப்பள்ளிகளை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். இங்கு தமிழுக்கு முதன்மை மொழி என்பதை உயர் நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லியும், இந்தி திணிப்பு என்ற ஓர் பொய்யான வாதத்தை வைத்து இத்தனை நன்மைகள் இருக்கும் பள்ளிகளை தடுப்பதை தமிழக மக்கள் குறிப்பாக கிராமப்புற மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்களின் சுயநலம் இங்கே அப்பட்டமாக வெளிப்பட்டிருப்பதை தமிழக மக்கள் உணர்வார்கள் என்பதே உண்மை. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a comment