பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்(காணொளி)

1062 21

யாழ்ப்பாண மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய வேளையில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து இலங்கையின் சகல பகுதி சுகாதார உத்தியோகத்தர்களும் ஒன்று திரண்டு யாழ்ப்பாணம் பண்ணையில் இருந்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சு வரை நடைபவனியாக சுகாதார அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு வடக்கு மாகாண சுகாதார அமைச்சரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்து தமது பிரச்சினைகளை விரிவாக அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு சுகாதார அமைச்சர் ஜி.குணசீலன், இந்தப் பிரச்சினை இரண்டு திணைக்களங்களுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதனால் இதனை தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது எனவும், எனினும் இப்பிரச்சினையை சுமுகமாக, சமாதானமான முறையில் தீர்க்கவே தான் முனைவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு தனக்கு கால அவகாசம் தருமாறும், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களிடம் வடக்கு சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment