கொலம்பிய சுற்றுப்பயணத்தில் போப் ஆண்டவருக்கு லேசான காயம்

315 0

கொலம்பிய சுற்றுப்பயணத்தில் மக்களை சந்தித்த போது நிலைதடுமாறிய போப் பிரான்சிஸ், வாகனத்தில் இருந்த குண்டு துளைக்காத கண்ணாடியின் மீது மோதியால் சிறுது லேசான காயம் ஏற்பட்டது.

போப் ஆண்டவர் பிரான்சிஸ், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அங்குள்ள கார்ட்டஜினா நகரில் மக்களை சந்தித்தார். திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே திறந்த வாகனத்தில் நின்றவாறு அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டு சென்றார்.

அப்போது திடீரென நிலைதடுமாறிய போப் பிரான்சிஸ், வாகனத்தில் இருந்த குண்டு துளைக்காத கண்ணாடியின் மீது மோதினார். இதில் அவரது கன்னத்திலும், புருவத்திலும் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, காயத்தில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டது. பின்னர் அந்த காயத்துடனே மக்களை சந்தித்து ஆசி வழங்கினார். பின்னர் அங்கு வழிபாடு நடத்தினார்.

முன்னதாக, உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியிருப்பதாக மனித உரிமைக்குழுக்கள் வெளியிட்டு இருக்கும் செய்தி குறித்து அவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டார். கொலம்பியாவின் அண்டை நாடான வெனிசூலாவில் நிகழ்ந்து வரும் அரசியல் வன்முறைகள் குறித்தும் போப் ஆண்டவர் வருத்தம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘கொலம்பியா மற்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இன்னும் அடிமைகளாக விற்கப்படுகின்றனர். மனிதாபிமானத்துக்காக ஏங்கும் அவர்கள் நிலம் அல்லது கடல் வழியாக வெளியேறுகின்றனர். ஏனெனில் அவர்கள் தங்கள் உரிமை, கண்ணியம் என அனைத்தையும் இழந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Leave a comment