பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

15122 0

பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு
நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

தாயகவிடுதலைக்காக கண்ணுறக்கமற்று தன்னலமற்று தொண்டாற்றிய புங்குடுதீவு மடத்துவெளி 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களை 03.09.2017 அன்று நாம் இழந்துநிற்கின்றோம்.

தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காய் 1980 ஆண்டு முதல்; தன்னை அர்ப்பணித்து பல்வேறுவகைகளிலும் பங்களிப்பு நல்கிவந்த ஓர் உன்னதமான நாட்டுப்பாற்றாளனின் இழப்பு எமக்கு பேரிழப்பாகவே உள்ளது.

1990 ஆம் ஆண்டில் சிங்களபடையினரின் நிலஅபகரிப்பு நடவடிக்கையால் புங்குடுதீவை விட்டு யாழ் மாவட்டத்திற்கும் பின்னர் வன்னி மாவட்டத்திற்கும் இடம்பெயர்ந்து வாழ்ந்த கனகலிங்கம் அவர்கள் மிகுந்த இக்கட்டான காலப்பகுதிகளில் எல்லாம் மக்களின் தேவை அறிந்து பலநோக்கு கூட்டுறவு சங்ககிளைகளை புனரமைத்துச் செயற்படுத்தினார். அப்போது நிலவிய பல தடைகளையும் தாண்டி தாண்டிக்குளம் ஊடாக அத்தியாவசிய பொருட்களை வன்னி நிலப்பரப்புக்குள் கொண்டுவந்த மக்கள் தொண்டன். தேசிய தலைவர்மீது தீராத பற்றுக்கொண்ட இவர் தாயக விடுதலைப் போராட்டத்தில் போராளிகளுக்கு நிகராக நின்று தனது உடல் உபாதைகளுக்கும் மத்தியிலும் முள்ளிவாய்க்கால்வரை நின்று விடுதலைக்காய் உழைத்த நாட்டுப்பற்றாளன். குண்டு மழையின் நடுவேநின்று தேசிய தலைவருக்கும், மாவீரர்களுக்கும், போராளிகளுக்கும் பக்கபலமாக பாடுபட்டவர்.

1991 முதல் 2009வரை கூட்டுறவு அமைப்பின் காப்பாளனாயிருந்து வன்னி – யாழ் கூட்டுறவு உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் சமூகபொருளாதார விடுதலையின் ஊடாக தேசியவிடுதலையை முன்னெடுக்கமுடியும் என்பதை உணர்த்தியவர். யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின், கிளி – அக்கராயன் மற்றும் முழங்காவில் பிரதேசத்தில் கூட்டுறவுப் பணியில் சிறந்த கூட்டுறவாளனாய் தொண்டாற்றியதுடன், தாயகவிடுதலைக்கான வலுச்சேர்ப்பில் கலைப்படைப்புக்களை முன்னெடுக்கும் பெரும் பொறுப்புக்களை தன்தோள்களிற் தாங்கியவர்.

காலத்தேவைகளுக்கேற்ப தோற்றம்பெற்ற தேசிய போரெழுச்சிக்குழு, தேசிய எழுச்சிபேரவை, இடம்பெயர்ந்த தீவகமக்கள் நலன்காப்பகம் மற்றும் இதர கட்டமைப்புகளிலும் அவற்றின் வளர்ச்சிக்காகவும் அயராது முன்னின்று உழைத்தவர். கலைத்துறையிலும் மிகுந்த ஈடுபாடுகொண்ட இவர் ‘புள்ளி’ எனும் பெயரில் இலக்கிய இதழ் ஒன்றையும் வெளியிட்டவர்.
அன்னாரின் மறைவு எமது இனத்திற்கு பேரிழப்பாகும். இவருக்கு எமது அகவணக்கத்தினை தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும் எம் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அமரர் பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களிற்கு நாட்டுப்பற்றாளர் என்னும் கௌரவம் வழங்கி மதிப்பளிக்கப்படுகின்றது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Leave a comment