புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு – செல்­வ­ரட்னம் சிறி­தரன்

452 0

யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதியில் தமிழ் அரசியல் செயற்பாடுகளில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை. முன்னேற்றத்திற்குப் பதிலாக பின்னடைவே ஏற்பட்டிருக்கின்றது என்பதே சரியான மதிப்பீடாக இருக்கும். அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு வலுவானதோர் அரசியல் தலைமையும் அமையவில்லை என்பதையும் யுத்தத்திற்குப் பிந்தைய காலப்பகுதி வெளிப்படுத்தியிருக்கின்றது.

இராணுவ சக்தி சார்ந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமை விடுதலைப் புலிகளின் பொறுப்பில் இருந்த வேளை அரசாங்கத்திடம் சமநிலைத் தன்மை காணப்­பட்­டது. சம அந்­தஸ்­து­ட­னேயே, விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச தரப்­பி­ன­ருக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. துர­திர்ஷ்ட­வ­ச­மாக விடு­த­லைப்­பு­லிகள் இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து அர­சியல் நிலைப்­பாட்டில் தோல்­வி­கண்ட ஒரு நிலை­மைக்கே தமிழர் தரப்பு தள்­ளப்­பட்­டி­ருந்­தது.

யுத்­தத்தில் வெற்­றி­பெற்­றி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் தலை­மை­யா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புடன் அர­சியல் ரீதி­யாக சம­நி­லையில் மட்­டு­மல்ல, பொறுப்­பான ஒரு நிலை­யிலும் கூட தொடர்­பு­களைப் பேணி­யி­ருக்­க­வில்லை.

இந்­தி­யாவின் அழுத்தம் கார­ண­மாக, அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருந்த போதிலும், அந்தப் பேச்­சு­வார்த்­தைகள் ஒரு கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­யா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன என வெளி­யா­ருக்குக் காட்­டு­வ­தற்­காக மட்­டுமே அந்தப் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன. ஏனெனில் அந்தப் பேச்­சுக்­களின் போது எட்­டப்­பட்ட முடி­வுகள் அல்­லது விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் மேற்­கொள்­ள­வில்லை.

அர­சுக்கு அழுத்தம் கொடுக்­க­வில்லை

அரச தரப்­பினால் பேச்­சு­வார்த்­தைகள் இழுத்­த­டிக்­கப்­பட்­டன. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால் முன்­வைக்­கப்­பட்ட விட­யங்­களை உரிய முறையில் ஆராய்ந்து அதற்­கான முடி­வு­களை எட்­டு­வ­தற்குப் பதி­லாக தமிழர் தரப்பை ஏமாற்­று­வ­தற்­கான முயற்­சி­க­ளி­லேயே அர­சாங்கத் தரப்பில் கலந்து கொண்­டி­ருந்த பிர­தி­நி­திகள் கண்ணும் கருத்­து­மாக இருந்­தனர். இறு­தியில் பேச்­சு­வார்த்­தை­களைப் புறந்­தள்­ளிய அர­சாங்கம், ஒரு வருட காலம் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­திற்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் அல்ல. அது தனிப்­பட்ட முறையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள். எனவே அவற்றை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்ற குண்டைத் தூக்­கிப்­போட்டு, அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தையை முடி­வுக்குக் கொண்டு வந்­தி­ருந்­தது.

அர­சியல் நட்பு ரீதி­யான ஓர் இணக்­கப்­பாட்­டுடன் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வதில் பெரும்­பங்கு வகித்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்கம் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே இரண்­டரை வரு­ட­கா­லத்தைப் போக்­கி­யி­ருக்­கின்­றது.

தமிழ் மக்­க­ளு­டைய அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளான எரியும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்­பதில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் விருப்­ப­மற்­ற­வ­ரா­கவே இருந்தார். அதே­போன்று புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண முடியும் என்ற நம்­பிக்­கையை தமிழ் மக்­க­ளுக்கு ஊட்­டி­வந்­தா­ரே­யல்­லாமல், அதற்­கு­ரிய அர­சியல் ரீதி­யான அழுத்­தத்தை அர­சாங்­கத்தின் மீது அவர் பிர­யோ­கிக்­கவே இல்லை.

எதிர்­பார்த்­த­வாறு தீர்வு கிட்­ட­வில்லை

தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அர­சாங்­கத்­திற்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அழுத்தம் கொடுத்தால், அது, எதேச்­ச­தி­கார ஆட்சி நடத்தி தமிழ் மக்­க­ளுக்குப் பேரிடர் விளை­வித்­தி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மீண்டும் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்கு வழி­யேற்­ப­டுத்­தி­விடும் என்று தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யான அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார். எனவே, நல்­லாட்சி அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும், 2016 ஆம் ஆண்டு இறு­திக்குள் அர­சியல் தீர்வு காணப்­படும் எனவே, அது­வ­ரையில் அமை­தி­காக்க வேண்டும் என்று அவர் அறி­வு­றுத்தி வந்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்­துடன் நிபந்­த­னை­யுடன் கூடிய ஓர் ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் இணங்கிச் செயற்­பட வேண்டும் என்று கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சிகள் தெரி­வித்த ஆலோ­ச­னையை சம்­பந்தன் ஏற்­றுக்­கொள்ளவில்லை. அர­சியல் ரீதி­யான புரிந்­து­ணர்வு, அர­சியல் ரீதி­யான பரஸ்­பர நம்­பிக்கை என்­ப­னவற்றின் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகி­யோ­ருடன் கொண்­டுள்ள அர­சியல் உறவே போதும். அந்த உறவின் ஊடாக பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் வலி­யு­றுத்தி வந்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூலம் இரா­ணுவம் கைப்­பற்றி நிலை­கொண்­டுள்ள பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­படும். சிறைச்­சா­லை­களில் வாடும் தமிழ் அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பொறுப்பு கூறப்­படும். இர­க­சி­ய­மாக ஆட்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இடங்கள் பற்­றிய விப­ரங்கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லான பெயர்ப்­பட்­டியல் வெளி­யி­டப்­படும், வடக்கில் தேவைக்கு அதி­க­மாக நிலை­நி­றுத்­தப்­பட்­டுள்ள இரா­ணு­வத்தின் எண்­ணிக்கை கணி­ச­மான அளவில் குறைக்­கப்­பட்டு சிவில் செயற்­பா­டு­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­கப்­படும், ஐ.நா. மனித உரிமை பேர­வை­யிடம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­வாறு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­படும் என்­பது போன்ற நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்கக் கூடிய பிரச்­சி­னை­க­ளுக்­குக்­கூட தீர்வு காணப்­ப­ட­வில்லை.

அத்­துடன் 2016 ஆம் ஆண்­டுக்குள் அர­சியல் தீர்வு காணப்­படும் என்ற எதிர்­பார்ப்பும் நிறை­வே­ற­வில்லை. மாறாக 2016 ஆம் ஆண்டு முடி­வ­டைந்து 2017 ஆம் ஆண்டும் முடி­வ­டையும் தறு­வா­யி­லும்­கூட அர­சியல் தீர்வு கிடைக்­குமா என்­பது சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­தா­கவே இருக்­கின்­றது.

சர்­வ­தே­சத்தின் நிர­லி­லேயே நிகழ்­வுகள்

பரஸ்­பர நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் அர­சாங்­கத்­துடன் நெருங்கிச் செயற்­பட்ட போதிலும் அந்த இணக்க அர­சி­யலின் மூலம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய தேவைகள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. ஐ.நா­.வுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் அர­சாங்கம் அளித்த வாக்­கு­று­தி­க­ளின்­படி போர்க்­கால உரிமை மீறல் விட­யங்­களில் பொறுப்பு கூறு­வ­தற்கும், நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்டி, நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­துவ­தற்கும் நம்­பிக்­கை­யூட்­டத்­தக்க நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இதனால் தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை அர­சாங்கத் தரப்­பிடம் விலை­போய்­விட்­டதோ என்று எண்­ணத்­தூண்டும் அள­வுக்கு நிலை­மைகள் மோச­மா­கின.

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­காக சர்­வ­தே­சத்­துடன் இரா­ஜ­தந்­திர ரீதி­யாகத் தொடர்­பு­கொண்டு அதன் ஆத­ரவைப் பெற்று காய்­ந­கர்த்­தல்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் கூறப்­பட்­ட­தே­யொ­ழிய அந்த இரா­ஜ­தந்­திரத் தொடர்­பு­களின் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய வகையில் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­கப்­பட்­டதைக் காண முடி­ய­வில்லை.

முன்­னைய அர­சாங்­கத்தைப் போலல்­லாமல், ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ரணை பெறப்­பட்­டி­ருந்த போதிலும், குறித்த காலக்­கெ­டு­வுக்குள் செய்து முடிக்­கப்­பட வேண்­டிய காரி­யங்கள் அர­சாங்­கத்­தினால் செய்து முடிக்­கப்­ப­ட­வில்லை.

சர்­வ­தே­சத்தின் ஆத­ரவு கூட்­ட­மைப்­புக்குக் கிடைத்­தி­ருக்­கின்­றது என கூறப்­பட்­ட­போ­திலும், அந்த ஆத­ரவைப் பயன்­ப­டுத்தி, கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால் அர­சாங்­கத்­திடம் காரி­யங்­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­ய­வில்லை. சர்­வ­தே­சத்தின் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ற வகை­யி­லேயே கூட்­ட­மைப்பு விட்­டுக்­கொ­டுப்­புக்­களைச் செய்ய வேண்­டி­யி­ருக்­கின்­றது. ஐ.நா. பிரே­ர­ணையில் ஒப்­புக்­கொள்­ளப்­பட்­ட­வாறு நிலை­மா­று­கால நீதிக்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வதில் கூட்­ட­மைப்­பினால் சர்­வ­தே­சத்தின் ஊடாக, அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்க முடி­ய­வில்லை. மாறாக சர்­வ­தே­சத்தின் பிராந்­திய அர­சியல் ரீதி­யான நலன்­களின் அடிப்­ப­டையில். ஐ.நா. பிரே­ர­ணையில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு, கூட்­ட­மைப்பின் ஒப்­பு­த­லுடன் அர­சாங்­கத்­திற்கு மேலும் இரண்டு ஆண்­டுகள் கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தலைமை தவ­றி­விட்­டது

ஏனைய பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் முற்­கூட்­டியே கலந்­தா­லோ­சிக்­காமல், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இதற்­கான ஒப்­பு­தலை வழங்­கி­யி­ருந்தார். இந்த விடயம் அமெ­ரிக்க தூது­வரின் கூற்­றுக்கு ஊடா­கவே வெளியில் கசிந்­தி­ருந்­தது. அது­வ­ரையில் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்சித் தலை­வர்­க­ளுக்­குக்­கூட இந்த விடயம் கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால் உரிய முறையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

மொத்­தத்தில் பாதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­காக, அர­சாங்­கத்­து­டனும், சர்­வ­தே­சத்­து­டனும் பல வழி­க­ளிலும் தீவி­ர­மாகச் செயற்­ப­டு­வ­தற்குப் பதி­லாக கூட்­ட­மைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்­றுள்ள தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வளர்ச்­சி­யையும் நல­னையும் பேணு­வ­தி­லேயே கூட்­ட­மைப்பின் தலைமை ஆர்வம் காட்டி வரு­கின்­றது என குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

அதே­வேளை, கூட்­ட­மைப்பை ஓர் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்து அதனைக் கட்­ட­மைத்துச் செயற்­ப­டுத்­து­வ­திலும் கூட்­ட­மைப்பின் தலைமை ஆர்வம் காட்­ட­வில்லை என்றும் குறை கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்தக் குறை இன்னும் தொடர்­கின்­றது. அது மட்­டு­மல்­லாமல், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் ஆட்சி பலத்தைக் கொண்­டுள்ள வட­மா­காண சபையின் நிர்­வாகச் செயற்­பா­டு­களை சீரான முறையில் கட்­ட­மைத்துச் செயற்­ப­டுத்­து­வ­திலும் கூட்­ட­மைப்பின் தலைமை தவ­றி­விட்­டது என்­பதும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

வட­மா­கா­ணத்­துக்­கான முத­ல­மைச்­ச­ராக முன்னாள் நீதி­ய­ரசர் விக்­னேஸ்­வ­ரனை அர­சி­ய­லுக்குள் பிர­வே­சிக்கச் செய்­தி­ருந்த போதிலும், அவ­ரு­டைய தலை­மை­யி­லான வட­மா­காண சபையை நிர்­வாகத் திறன் மிக்­கதோர் சபை­யாக மாற்ற கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனால் முடி­யாமல் போயி­ருக்­கின்­றது.

ஏனெனில் முத­ல­மைச்­ச­ராக மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட விக்­னேஸ்­வ­ரனும், அதே­போன்று வட­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்­களும் அர­சி­ய­லுக்குப் புதி­ய­வர்கள். முன் அனு­ப­வ­மற்­ற­வர்கள். இந்த நிலையில் அவர்கள் உரிய முறையில் அர­சி­யலில் வழி­ந­டத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும் என்­பது அந்த சபையின் செயற்­பா­டு­களின் மூலம் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

தமிழ் மக்கள் பேரவை

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை மீது பல்­வேறு குறை­களும் குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. பங்­கா­ளிக்­கட்சித் தலை­வர்­க­ளுடன் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் முக்­கி­ய­மான விட­யங்­க­ளி­லும்­கூட கலந்­தா­லோ­சனை நடத்திச் செயற்­ப­டு­வ­தில்லை. அவரும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மாவை சேனா­தி­ராஜா, மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஆகிய மூவ­ருமே முக்­கி­ய­மான முடி­வு­களை மேற்­கொண்டு செயற்­பட்டு வரு­கின்­றார்கள் என்று தொடர்ச்­சி­யாகக் குறை கூறப்­பட்டு வரு­கின்­றது.

இவ்­வா­றான ஒரு சூழ­லில்தான் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யலில் புதிய தலை­மைக்­கான நாட்டம் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. முதலில் கூட்­ட­மைப்பின் தலைமை இன்னும் திறன் மிக்­க­தாகச் செயற்­ப­டு­வ­தற்கு உத­வி­யாக, தென்­னா­பி­ரிக்­காவைப் பின்­பற்றி, தேசிய சபை ஒன்றை உரு­வாக்க வேண்டும் என்ற ஆலோ­சனை முன்­வைக்­கப்­பட்டு, அது தொடர்­பி­லான பேச்­சுக்­களும் நடை­பெற்­றி­ருந்­தன. ஆனால் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அதன் பின்பே, தமிழ் மக்கள் பேரவை உரு­வா­கி­யது.

ஆனால், தமிழ் மக்கள் பேர­வையை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்­கான மாற்று அர­சியல் சக்­தி­யா­கவே தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரும் வேறு சிலரும் நோக்­கி­னார்கள். அது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­னதோர் அர­சியல் சக்­தி­யாகப் பரி­ண­மிக்கப் போகின்­றது என்ற எண்­ணப்­பாட்­டையும் தோற்­று­வித்­தி­ருந்­தது. தமிழ் மக்கள் பேர­வை­யா­னது ஓர் அழுத்த சக்­தி­யா­கவும், வழி­காட்டல் அமைப்­பா­க­வுமே செயற்­படும் என்­பதை அந்த பேர­வையைச் சார்ந்­த­வர்கள் வலி­யு­றுத்திக் கூறிய போதிலும், ஒரு சிலர் அர­சி­யலில் பிர­வே­சிப்­ப­தற்­கா­னதோர் அர­சியல் அமைப்பு என்ற பார்­வையை முழு­மை­யாக மாற்ற முடி­ய­வில்லை.

வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலை­வ­ராக அதில் இணைந்­தி­ருப்­பது, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யேறி தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியை உரு­வாக்­கி­யுள்ள பொன்­னம்­பலம் கஜேந்­தி­ர­குமார், கடந்த பொதுத் தேர்­தலில் வெற்­றி­பெற முடி­யாமல் போயுள்ள ஈ.பி.­ஆர்.­எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆகியோர் பேர­வையில் இணைந்­தி­ருப்­பதும் இதற்கு முக்­கிய கார­ணங்­க­ளாகும். பேர­வையில் புளொட் அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சித்­தார்த்­தனும் இணைந்­துள்ளார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

புதிய அர­சியல் தலைமை

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு அல்­லது தமிழ் மக்­களின் அர­சியல் செயற்­பா­டு­களை செயற்­தி­றன்­மிக்க வகையில் முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரு புதிய அர­சியல் தலைமை தேவை என்ற உணர்வு இப்­போது வெளித்­தெ­ரியும் வகையில் தோன்­றி­யி­ருக்­கின்­றது.

புதிய தலை­மையை உரு­வாக்­கு­வது தொடர்பில் யாழ்ப்­பாணம், மன்னார், ஆகிய மாவட்­டங்­களில் பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. ஆயினும் இறுதி முடிவு ஒன்று இன்னும் எட்­டப்­ப­ட­வில்லை. புதிய தலை­மைக்குத் தலை­வ­ராக முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனைக் கொண்டு வர­வேண்டும் என்­பதில் அந்த முயற்­சியில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு நாட்டம் இருப்­ப­தாகத் தெரி­கின்­றது. ஆயினும் அந்த விருப்­பத்தை நிறை­வேற்­று­வ­தற்கு அவர் தயா­ராக இல்லை என்ற தக­வலும் அண்­மையில் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த நிலை­மையில் புதிய அமைப்­பா­னது ஒரு குழு­வாக – ஓர் அமைப்­பாக மட்­டுமே செயற்­படும் என்ற தீர்­மா­னத்தில் ஆலோ­ச­னை­களும் கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்று வரு­வ­தாகத் தெரி­கின்­றது. தலைவர் என்று ஒருவர் இருக்­க­மாட்டார் என்றும், குழு­வா­கவே அந்த அமைப்பு செயற்­படும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்டு, அதற்­கான யாப்பு வரைபு உள்­ளிட்ட ஆரம்­ப­க்கட்ட வேலைகள் நடை­பெற்று வரு­வ­தாகத் தக­வல்கள் கசிந்­தி­ருக்­கின்­றன.

இந்த அமைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வது குறித்து ஊட­கங்­க­ளுக்குத் தக­வல்கள் வெளி­யி­டு­வ­தில்லை என்­பதில் இறுக்­க­மான முடி­வெ­டுத்து சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.

புதிய அரசியல் தலைமை உருவாக வேண்டும் என்பதில் பலருக்கும் ஆவலும் ஆர்வமும் இருந்த போதிலும், அதற்குத் தலைமை தாங்குவது யார் என்பதில் முடிவெடுக்க முடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்பவர்களை மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பது பொதுவானதோர் அரசியல் நம்பிக்கையாகும். கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்ட அல்லது பிரிந்து சென்ற பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை உருவாக்கிச் செயற்பட்டு வருகின்றார். ஆயினும் கடந்த பொதுத் தேர்தலில் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர்கூட வெற்றிபெறவில்லை.

இது கூட்டமைப்புத் தலைமையின் செயற் பாடுகளிலும், அதன் போக்கிலும் அதி ருப்தியடைந்துள்ளவர்களுக்கு ஓர் எச் சரிக்கை மணியாக ஒலித்துக் கொண் டிருக்கின்றது. கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்பவர்கள் மக்களுடைய ஆதரவை இழந்துவிடுவார்கள் என்பதே பொதுவான அரசியல் அனுமானமாக உள்ளது,

இதனால்தான் வடமாகாண சபைத் தேர்தலில் அமோகமாக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஜனவசிய ரீதியில் தலைவராக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் அவர் அதற்குத் தயாராக இருக்கவில்லை.

எனவே, தலைவராக ஒருவர் இல்லாமல் புதிய அரசியல் தலைமையொன்று எவ் வாறு உருவாகப் போகின்றது என்பது இப்போதைக்கு அரசியல் ரீதியாக சுவாரஸ்யமான விடயமாகவே காணப் படுகின்றது.

எது எப்படியாயினும், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை எதிர் கொண்டுள்ள இப்போதைய அரசியல் சூழலில் தமிழ் மக்களுக்கான செயற்திறன் மிக்கதோர் அரசியல் தலைமை அவசியம் – அதுவும் அவசரமாக அவசியம் என்ற உணர்வு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வலுவான அரசியல் வழிநடத்தலின்றி காணிக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்காகவும் ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்ற மக்கள் மத்தியிலும் ஏனையோர் மத்தியிலும் வலுவாகத் தென்படுவதைக் காண முடிகின்றது.

Leave a comment