காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சந்தோஷ் மகாதிக்கின் மனைவி ராணுவ அதிகாரியாக பதவி ஏற்பு

4098 0

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரி சந்தோஷ் மகாதிக்கின் மனைவி உள்ளிட்ட 322 பேர் சென்னையில் பயிற்சி முடித்து ராணுவ அதிகாரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரி சந்தோஷ் மகாதிக்கின் மனைவி உள்ளிட்ட 322 பேர் சென்னையில் பயிற்சி முடித்து ராணுவ அதிகாரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். உத்தரகாண்ட் மாநில நிதி மந்திரியின் மகளும் ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டார்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிலையத்தில் 104-வது பேட்ஜ் சேர்ந்த 322 இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. அப்போது தென்பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எம்.ஹரீஸ் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக பயிற்சி மைய லெப்டினென்ட் ஜெனரல் ராஜன் ரவீந்திரன் வரவேற்றார். தொடர்ந்து ராணுவ தளபதி, ராணுவ அதிகாரிகளுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். பதவி பிரமாணத்தின் போது, புதிய ராணுவ அதிகாரிகள் உறுதிமொழி ஏற்று லெப்டினன்ட் கர்னல் பதவியை ஏற்றுக்கொண்டனர்.

பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் முதலிடமும், ஒட்டு மொத்த ‘மெரிட்’ அடிப்படையில் முதலிடம் பிடித்த ஆர்.அபிஷேக்குக்கு கவுரவ வாளும், தங்க பதக்கமும், ஒட்டுமொத்த ‘மெரிட்’ அடிப்படையில், 2-வது இடம் பிடித்த ஆரூஷி சர்மாவுக்கு வெள்ளி பதக்கமும், 3-வது இடத்தை பெற்ற விவேக் என்பருக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்பட்டன.

சிறந்த கம்பெனியாக ஜெஸ்மி கம்பெனி தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மூவர்ண பலூன்கள் வானில் பறக்கவிட்டு, பட்டாசுகள் வெடித்து, பயிற்சியை நிறைவு செய்தவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

பயிற்சி முடித்தவர்களில் 266 ஆண் அதிகாரிகளும், 31 பெண் அதிகாரிகளும் இந்திய ராணுவத்தில் ஒதுக்கப்பட்ட பணிகளில் சேர உள்ளனர். இதுதவிர பூடான், மாலத்தீவு, பிஜீ மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த 25 வெளிநாட்டு ராணுவத்தை சேர்ந்த ஆண் அதிகாரிகளும், பயிற்சி முடித்து அவர்களுடைய நாடுகளுக்கு செல்கின்றனர்.

விழாவை காண வந்திருந்த இளம் ராணுவ அதிகாரிகளின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்து தங்கள் பிள்ளைகளுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.


 நிதி துபே                                                   சுவாதி மகாதிக்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் மகாதிக் மனைவி சுவாதி மகாதிக் பயிற்சி முடித்து ராணுவ அதிகாரியானார். இவர் பதவி ஏற்பதை காண அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

சுவாதி மகாதிக் கூறும் போது, ‘என்னுடைய கணவர் காஷ்மீரில் நடந்த போரில் வீர மரணமடைந்தார். இருந்தாலும் மனம் தளராமல் நாட்டுக்காக சேவை செய்யவும், குடும்பத்தை காப்பாற்றவும், ராணுவ அதிகாரியாக ஆக முடிவு செய்தேன். அதன்படி தற்போது ராணுவ அதிகாரியாகி நாட்டுக்கு முழுமனதுடன், என் கணவர் விட்டுச்சென்ற பணியை வெற்றிகரமாக செய்துமுடிப்பேன்’ என்றார்.

பயிற்சி முடித்த தன்னுடைய மகள் வமிதா பாண்ட் உடன் உத்தரகாண்ட் மாநில நிதி மந்திரி பிரகாஷ் பாண்ட் அவருடைய மனைவி இருப்பதை படத்தில் காணலாம்.

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த நாயக் முகேஷ்குமார் துபேயின் மனைவி நிதி துபே ராணுவ அதிகாரியானார். உத்தரகாண்ட் மாநில நிதி மந்திரி பிரகாஷ் பாண்ட் மகள் வமிதா பாண்ட் ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்றார்.

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் எ.ராமலிங்கத்தின் மகன் எஸ்.ஆர். செல்லகுமார். பி.இ., பட்டதாரியான இவர் ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டார்.

விழாவில் தென்பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி ஆர்.கே.ஆனந்த், நடிகர் கமல்ஹாசன், படஅதிபர் ராம்குமார், ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment