மியன்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து முல்லைத்தீவு ஹிஜிராபுரம் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இன்று(08) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு வாழ் முஸ்லீம்கள் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இன்றைய ஜும்மா தொழுகையின் பின்னர் ஹிஜிராபுரம் பள்ளிவாசலுக்குமுன்பாக ஒன்றுகூடியவர்கள் கண்டனகோசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ரோஹிங்யா “முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலையை உடன் நிறுத்து , ஆன் சான் சூசி நோபல் பரிசை திருப்பிக்கொடு, ஐநா சபையே மௌனம் காப்பது ஏன் ??,ஐநா சபையே ஏன் இந்த தூக்கம் ?இலங்கை வாழ் முஸ்லிம்களே ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக பிரார்த்திப்போம் ,இலங்கை அரசே மியான்மர் அரசுக்கு அழுத்தம்கொடு ,போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் ஜெனோபர் மற்றும் அப்பகுதி முஸ்லிம் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

