இலங்கையில் கடும் மழையுடனான காலநிலை தொடர்கின்றது

277 0

கடும் மழையுடனான காலநிலையின் காரணமாக இரத்தினபுரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

களுகங்கை பெருக்கெடுப்பால் ரத்தினபுரியில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

இதன்காரணமாக அயகம, எலபாத்த, பல்தொல, பட்டுகெதர, குருவிட்ட ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகள் முற்றாக நீரில் மூழ்கின.

இவைத் தவிர, முத்துவ, பலிபத்கொட, முவகம, இரத்தினபுரி நகரத்தை அண்டிய பகுதிகள் மற்றும் கெட்டங்கம ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கி இருந்ததாக அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அயகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக 220 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 3 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது வெள்ளம் வழிந்தோடிவருவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, எஹெலியகொட, எலபாத்த, அயகம ஆகிய ஐந்து கல்வி வலையங்களின் பாடசாலைகள் இன்றையதினம் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, குக்குளே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில், களுகங்கை மில்லெனிய பிரதேசத்தில் பெருக்கெடுத்துள்ளது.

இதனால் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, அகலவத்தை மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளில் கங்கை ஊடறுத்து செல்லும் பிரதேசங்களின் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் கோரியுள்ளது.

அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, நுவரெலியா, களுத்துறை, கோகாலை, காலி ஆகிய ஐந்து மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலலுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Leave a comment