இந்திய – சீன எல்லையில் அமைதி நிலவ இரு நாட்டு தலைவர்களும் இணக்கம்

365 0

இந்திய – சீன எல்லையில் அமைதி நிலவ இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும்,  சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெயஷங்கர் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது, எல்லையில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியை முன்னெடுக்க இரு நாட்டு தலைவர்களும் சம்மதம் வெளியிட்டதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர்கள் நம்புகின்றனர் என்றும், அவர்களின் சந்திப்பும் ஆக்கபூர்வமாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லை சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதியில் அமைந்துள்ளது.

அங்கு வீதியொன்றை  அமைக்க கடந்த ஜூன் மாதம் சீனா முயற்சித்தது.

அதை இந்திய இராணவத்தினர் தடுத்து நிறுத்தியதால், ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, இருநாடுகளும் படையினரை குறித்ததாக போர் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு படைகள் மீளப் பெறப்பட்டன.

இந்த டோக்லாம் எல்லை பிரச்சினைக்கு பின்னர் இந்திய மற்றும் சீன அரச தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.

 

இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள், மற்றும் வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இந்தச் சந்திப்பை நிறைவுசெய்த பிரதமர் மோடி, மியான்மார் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Leave a comment