20வது திருத்தச்சட்டத்திற்கு வடமாகாணசபையில் கடுமையான எதிர்ப்பு

401 0
20வது திருத்தச்சட்டத்திற்கு வடமாகாணசபையில் கடுமையான எதிர்ப்பு எழும்பியதையடுத்து வரும் 7ம் திகதி இடம்பெறவுள்ள அமர்வில் அந்த சட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்பட முடிவாகியுள்ளது.
 வடமாகாணசபையின் 104வது அமர்வு இன்று அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இடம்பெற்றது.
 20வது திருத்தச்சட்டம் தொடர்பில் மாகாணசபைக்கு ஜனதிபதியால் அனுப்பி வைக்கப்பட்ட திட்டவரைபு இன்றைய அமர்வில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
  மக்களின் இறையாண்மையிணை மறுத்து மாகாணசபைகள் மீது பாராளுமன்றம் மிலேச்சத்தனமான அதிகாரத்தை பிரயோகிக்க 20வது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் எனவும் அதனால் தாம் அதை எதிர்ப்பதாக இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 இதேவேளை அரைகுறையான அரசியல் யாப்பை மக்கள்மீது திணிப்பதற்கு 20வது சட்டத்தை அரசு பயன்படுத்துவதாக முதலமைச்சர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்து ஆளும் தரப்பு உறுப்பினர் கேசவன் சயந்தன் உரையாற்றினார்.
 தொடர்ந்து எதிர் கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட உறுப்பினர்கள் 20வது திருத்தச்சட்டம் தொடர்பில்  எதிர் விமர்சனங்களை முன்வைத்தனர்.இச்சட்டம் தொடர்பாக அரசாங்கம் வேறு ஏதாவது மாற்று முடிவை அறிவிக்குமாறு என்பது தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் இறுதிமுடிவு  வரும் ஏழாம் திகதி எடுக்கப்படும் என அவைத்தலைவர் இதன்போது அறிவித்தார்.

Leave a comment