தமிழக கவர்னரின் மவுனம் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும்

2285 0

தமிழக கவர்னர் கடமையை செய்ய தவறிவிட்டதாகவும், அவர் மவுனமாக இருப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளனர்.

தமிழக முதலமைச்சருக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். 5 கட்சிகள் சார்பில் கொடுக்கப்பட்ட அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றிருப்பதால் எழுந்துள்ள சட்ட ரீதியிலான குழப்பம் பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.

கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட போது அவரிடம் 15 நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார்.

அதன்படி சட்டசபையில் பிப்ரவரி 18-ந்தேதி ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் குழப்பம் ஏற்பட்டது. அன்று ஜனநாயகமற்ற முறையில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

சட்டப்பிரிவு 163(1)ன் படி முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் உதவி மற்றும் அறிவுரைப்படி கவர்னர் செயல்பட வழி வகுக்கிறது. சட்டப்பிரிவு 164(4)ன் படி அனைத்து அமைச்சர்களுக்கும் சட்ட மன்ற பணிகளில் கூட்டுப் பொறுப்பு உள்ளது.

இந்த நிலையில் 19 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை திரும்பப் பெறுவதாக தனித்தனியாக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அன்றே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டார்.

தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 234 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தமிழக சட்டசபையில் 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தான் உள்ளது. அரசை எதிர்க்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக இருக்கிறது.

ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் பேரில் துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த போது, எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா என்பதை அறிய கவர்னர் தவறி விட்டார்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் இது பற்றி உடனடியாக கவர்னரின் கவனத்துக்கு 22-8-2017 அன்று எழுதிய ஒரு கடிதம் மூலம் கொண்டு வந்தார். அதோடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சட்டசபையில் பெரும் பான்மை பலத்தை நிரூபித்து காட்ட கவர்னர் உடனே உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். ஆனால் அதை ஏற்று கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

தி.மு.க. மட்டுமின்றி காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னருக்கு கடிதம் எழுதி இருக்கின்றன. ஆனால் கவர்னரோ தனது சட்டப்பூர்வ கடமையை செய்யத்தவறி விட்டார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதாக கூறப்படுவது பற்றி அவர் உணரவில்லை.

இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் தலைமையில் எதிர்க்கட்சிகளின் குழு கடந்த 27-8-2017 அன்று கவர்னரை சந்தித்து பேசி, இது தொடர்பான விரிவான விளக்க மனு ஒன்றை கொடுத்தது. அதோடு தமிழ்நாட்டில் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விரிவாக கவர்னரிடம் பேசினார்கள்.

ஜனநாயகத்தை காப்பாற்ற நல்லாட்சி நடப்பதை உறுதிபடுத்த சட்டசபையில் எடப்பாடி அரசு மீது ஓட்டெடுப்பு நடத்த காலம் தாழ்த்தாமல் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
என்றாலும் கவர்னர் எந்த ஒரு உத்தரவையும் வெளியிடவில்லை.

இதையடுத்து மற்ற எதிர்க் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி தலைவர்கள் 30-ந்தேதி கவர்னரை சந்தித்து இது தொடர்பாக பேசினார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மெஜாரிட்டி நிரூபித்து காட்ட கவர்னர் உடனே உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கவர்னர் சட்ட கடமையை செய்ய தவறினால் அது தமிழ்நாட்டை மைனாரிட்டி அரசு சட்ட விரோதமாக ஆட்சி செய்ய வழி வகுத்து விடும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் கவர்னர் மவுனம் சாதிக்கிறார்.

இது தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் குதிரை பேரம் நேரடியாகவே நடப்பதற்கு உற்சாகப்படுத்துவது போல உள்ளது.இது ஜனநாயக மற்ற செயல். எனவே எடப்பாடி பழனிசாமியை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிடாதது தவறாகும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment