மருத்துவ கலந்தாய்வு-மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடைபெறுகிறது: தமிழக அரசு

558 0

மருத்துவ கலந்தாய்வில் பிற மாநில மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதை மறுத்துள்ள தமிழக அரசு, கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெறுவதாக விளக்கம் அளித்துள்ளது.

மருத்துவ கலந்தாய்வில் பிற மாநில மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி தொடர்பாக தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். /பி.டி.எஸ் இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு வெளிப்படையாகவும், ஒளிவு மறைவின்றியும் சென்னை ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் கலந்தாய்வு முடிவுகளைப்பற்றி
உண்மைக்கு மாறான சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இது குறித்த உண்மை நிலை பின்வருமாறு:-

மருத்துவக் கலந்தாய்வைப் பொறுத்தவரை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2445 இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தைய்யா மருத்துவக் கல்லூரியில் உள்ள 127 இடங்கள் மற்றும் 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளால் அரசுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ள 859 இடங்கள், அகில இந்திய அளவில் கலந்தாய்வுக்குப் பின் மாநில அரசுக்கு திருப்பி ஒப்பளிக்கப்பட்ட 101 இடங்கள் எனமொத்தம் 3532 இடங்களுக்கும், இதேபோன்று 1201 பல் மருத்துவப் படிப்புக்கான இடங்களுக்கும் கலந்தாய்வு, இடஒதுக்கீடு முறையை பின்பற்றி, 24.08.2017 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை, ஒதுக்கீடு செய்யப்பட்ட 4546 எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் இடங்களில், 3112 இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், 1434 இடங்கள் சி.பி.எஸ்.இ மற்றும் இதர பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தகுதியை பொறுத்தவரை, இந்த ஆண்டுக்கான விண்ணப்பப் படிவத் தகவல் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளின்படியே கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சில சமூக ஊடகங்களில் பிற மாநில மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் இரட்டை பூர்வீக சான்றிதழ் பெற்றுள்ளவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது என்றும் செய்திகள் பரவி வருகின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கும், தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புவரை படித்த மாணவர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இராணுவம், மத்திய அரசுப் பணி மற்றும் இதர பணிகள் காரணமாக பிற
மாநிலங்களில் சென்று பணியாற்றிவரும் நிலையில் அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முறையாக பூர்வீகச் சான்றிதழ் பெற்றிருந்தால், கடந்த பல ஆண்டுகளாக உள்ள அதே நடைமுறையைப் பின்பற்றியே இந்த ஆண்டும் அவர்கள் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

30.8.2017-ஆம் தேதிவரை நடந்த கலந்தாய்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழகத்தில் படித்த 4090 மாணவர்கள், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 428 மாணவர்கள் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஆனால் தமிழகத்தில் 8-வது முதல் 12-ம் வகுப்பு வரை 5 ஆண்டுகள் கல்வி பயின்ற 28 மாணவர்கள் என மொத்தம் 4546 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் /பி.டி.எஸ் படிப்பிற்கான இடங்கள் உரிய விதிமுறைகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, 1500-க்கும் மேற்பட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் மாநில அரசு நடத்திய கலந்தாய்வு மூலமாக மருத்துவபடிப்பிற்கான ஒதுக்கீடு பெற்றுள்ளார்கள் எனக் கூறப்படும் கருத்துகள் முற்றிலும் தவறானவையாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment