பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை இந்திய போட்டி இன்று 

325 0

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்றையதினம் நடைபெறவுள்ளது.

5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே 3க்கு0 என்றக் கணக்கில் கைப்பற்றியுள்ளது.

கடந்த போட்டியில் இலங்கை அணிக்கு தலைமைத் தாங்கிய சாமர கப்புகெதர காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார்.

இந்த நிலையில் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தலைமை வகிக்கிறார்.

இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில், டில்சான் முனவீர இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் அதன் தலைவர் விராட் கோலி, எதிர்வரும் இரண்டு போட்டிகளிலுமு பரீட்சாத்த முயற்சிகளை முயற்சிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி மனிஸ் பாண்டே, குல்தீப் யாதவ் மற்றும் சார்டுல் தாகூர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடுகளம் ஓரளவுக்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும் என்று கணிக்கப்படுகிறது.

மாலை வேளையில் மழைக் குறுக்கிட வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த போட்டியில் இலங்கை அணிக்கு தலைமைத் தாங்கும் லசித் மலிங்க, 300 ஒருநாள் விக்கட்டுகளை வீழ்த்துவதற்கு இன்னும் 1 விக்கட் மாத்திரமே தேவையாக உள்ளது.

அத்துடன் இந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியின் 300வது ஒருநாள் போட்டியாகும்.

அத்துடன் ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டம்ப் ஆட்டமிழப்புகளை செய்த விக்கட் காப்பாளர் என்ற சாதனையைப் படைக்க தோனிக்கு இன்னும் 1 ஸ்டம்ப் மாத்திரமே தேவையாக உள்ளது.

அதேநேரம் கடந்த போட்டிகளின் போது இலங்கை அணி ஆதரவாளர்கள் மைதானத்தில் குழப்பம் விளைவித்ததன் காரணமாக, கொழும்பில் நடைபெறும் அனைத்துக் கிரிக்கட் போட்டிகளுக்கும் கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

மைதானத்தில் பல சீ.சீ.டி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், 1000க்கும் அதிகமான காவற்துறை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன் போத்தல், கொடிக்கம்புகள், உள்ளிட்ட பொருட்களுக்கும் மைதானத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment