தமிழிசையை விமர்சித்து பேட்டி: நாஞ்சில் சம்பத் மீது மேலும் 4 வழக்கு

373 0

தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவதால் அவர் மீது போலீஸ் நிலையத்தில் மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இதனை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர் தங்கியிருந்த ஓட்டல் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழிசை பற்றி தெரிவித்த கருத்துக்காக நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாவைச் சேர்ந்த நிர்வாகிகள் புகார் அளித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக ஏற்கனவே பட்டினப்பாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, சங்கர்நகர், பல்லாவரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது. 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே சைதாப்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களிலும் நேற்று நாஞ்சில் சம்பத் மீது பா.ஜனதா நிர்வாகிகள் புகார் அளித் தனர்.

தாம்பரம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா பிறமாநில செயலாளர் அசோக் ஜெயின் புகார் அளித்தார். அதில், பிரதமர் மோடியை அவதூறாக நாஞ்சில் சம்பத் விமர்சித்ததாக கூறப்பட்டு உள்ளது.

இதே போல் குரோம்பேட்டை பகுதி தலைவர் முனுசாமி, குரோம்பேட்டை போலீசில் அளித்த புகாரில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கடுமையாக விமர்சித்து நாஞ்சில் சம்பத் பேசியதாக தெரிவித்து உள்ளார்.

வேளச்சேரியில் சையூத் என்பவரும், சைதாப்பேட்டையில் சித்தார்த் என்பவரும் பா.ஜனதா சார்பில் புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 4 போலீஸ் நிலையங்களிலும் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 நாட்களில் சென்னையில் 8 போலீஸ் நிலையங்களில் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவர் கைது செய்யப் படுவார் என்று தெரிகிறது.

செங்குன்றம் காந்திநகர், போலீஸ் உதவி மையம் அருகே இன்று காலை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென நாஞ்சில் சம்பத் உருவபொம்மையை தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சோழவரம் போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இதற்கிடையே மாவட்ட தலைவர் பாஸ்கர், சோழவரம் போலீஸ் நிலையத்தில் நாஞ்சில் சம்பத் மீது புகார் தெரிவித்து உள்ளார்.

Leave a comment