சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் போராட்டங்கள்

221 0

சர்வதேச காணாமல் போனோர் தினமான இன்று நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி யாழ் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகிய காணாமல் போனவர்களின் உறவினர்களின் பேரணி யாழ் கோவில் வீதியில் உள்ள யாழ். பிராந்திய ஐ.நா சபை அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

இலங்கை காணாமற்போனோர் அலுவலக சட்டம், சுயாதீனமான விசேட நீதிமன்றம் அமைத்தல், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலை உள்நாட்டில் குற்றமாக்குதல், சுயாதீனமான தடயவியல் விஞ்ஞான ஆய்வு மையத்தை அமைத்தல், உண்மையை வெளிப்படுத்துதல், இழப்பீடுகள், உளவள ஆற்றுப்படுத்தல், மருத்துவ உதவிகள், பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள், பொது நலன் வழக்கு பதிதலை சட்டமாக்குதல் மற்றும் மீள நிகழாதிருத்தலை உறுதிப்படுத்துதல் போன்ற பத்து அம்ச கோரிக்கையினை வலியுறுத்திய மகஜர் ஒன்று யாழ் கோவில் வீதியில் உள்ள பிராந்திய ஐ.நா சபை பிரதான அலுவலகர் ஆர். கிசோபரிடம் கையளிக்கப்பட்டது.

இதுதவிர சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வாக கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது ஏழு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்திய தொடர் போராட்டம் இன்றுடன் 192வது நாளாக இடம்பெற்றுவரும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி ஊர்வலமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது.

மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மாவட்ட செயலக முன்றலில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் போனோரின் உறவினர்கள், தமது உறவுகள் தொடர்பில் தீர்க்கமான பதில் வழங்கப்பட வேண்டும், ஜனாதிபதியின் வாக்குறுதியும் பொய்யானது என்று பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

இப் போராட்டத்தில் காணமல் போனவர்களின் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment