தமிழகத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு தைரியமாக தேர்தலை சந்திக்க வேண்டும்: குன்னம் எம்.எல்.ஏ.

237 0

யாரிடமும் கெஞ்சாமல் தமிழகத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு, எடப்பாடி தலைமையிலான அரசு தைரியமாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று குன்னம் தொகுதி அ.தி.மு.க. (அம்மா) எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கூறினார்.

அரியலூர் மாவட்டம் செந்துறையில், அ.தி.மு.க.(அம்மா) குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சியில் சிறப்பாக பணியாற்றியதற்காக தன்னை பெரம்பலூர் மாவட்ட செயலாளராகவும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆகவும் பதவியில் அமர்த்தியவர் ஜெயலலிதா. நேற்று முன்தினம் டி.டி.வி. தினகரன் என்னை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளார்.

21 எம்.எல்.ஏ.க்கள் எதற்காக புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஜெயலலிதா ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அன்று கூவத்தூரில் தங்கினோம். ஆனால், இவர்கள் இன்று ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றவேண்டும் என்று புதுச்சேரியில் தங்கியுள்ளனர்.

தினகரன் எதற்காக சசிகலாவின் பெயரையும், படத்தையும் நீக்கிவிட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்தித்தார். கட்சியில் உள்ள 1½ கோடி தொண்டர்களும் சசிகலாவை ஏற்கவில்லை என்பதற்கு தானே?. அதனால் தான், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைவரும் இணைந்து சசிகலாவை நீக்க முடிவு செய்தோம். நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.

தி.மு.க.வினர் அ.தி.மு.க. வை ஊழல் கட்சி என்று சொல்லவில்லை. ஆனால், அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் போதே, கட்சி வேட்டியை கட்டிக்கொண்டு சில எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்று கூறி வருகின்றனர். இது வெட்ககேடான செயலாகும்.

சிலர் தங்களது சுயலாபத்திற்காக ஜெயலலிதா ஆட்சியை மிரட்டி வருகிறார்கள். எனவே, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாரிடமும் கெஞ்சாமல், யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தைரியமாக ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தலை சந்திக்க வேண்டும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க தயாராகவே உள்ளனர்.

சசிகலாவை பொதுச்செயலாளராக வேண்டும் என்று எண்ணும் 21 எம்.எல்.ஏ.க்களும், சசிகலாவின் பெயரையும், படத்தையும் வைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்கட்டும். அப்போது தெரியும் இவர்களது நிலைமை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “முதல்-அமைச்சரை மாற்றவேண்டும் என்றால், தலைமை கழகத்தில் அனைவரும் ஒன்றுகூடி தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து கவர்னரிடம் மனு கொடுப்பது தினகரன் தி.மு.க.விற்கு கொடுக்கும் சிக்னல். நாங்கள் மனு கொடுக்கிறோம், நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்பதாகும். சாதி பாகுபாடு இல்லாமல் கட்டுக்கோப்பாக இருக்கும் அ.தி.மு.க.வில் தினகரனும், திவாகரனும் சாதிப்பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறார்கள்” என்றார்.

Leave a comment