அமெரிக்காவில் வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மெட்ரோ ரெயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அழகு நிலையம் ஒன்றில் நேபாளத்தைச் சேர்ந்த கமலா ஸ்ரேஷ்தா(49) பணியாற்றி வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை இரவு வேலை முடிந்ததும் வீடு திரும்புவதற்காக ரெயில் நடைமேடையில் காத்திருந்துள்ளார்.
அப்பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை அணுகியுள்ளார். அப்பொழுது ரெயில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த நபர் கமலாவை கீழே தண்டவாளத்தில் தள்ளி விட்டுள்ளார். ரெயில் தண்டவாளத்தில் அடிபட்டு கமலாவின் தலையில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதனால் வலிதாங்க முடியாத அவர், அலறலுடன் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார்.
உடனே அங்கிருந்த இரண்டு பேர் உடனடியாக கை கொடுத்து அவரை தண்டவாளத்தில் இருந்து மேலே தூக்கி காப்பாற்றியுள்ளனர். ரெயில் வருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ‘போலீசார் அந்த நபரை கைது செய்வார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனெனில் அந்த நபர், மற்றவர்களிடமும் இதேபோன்று நடக்க முயற்சிக்கலாம்’ என கூறியுள்ளார்.

