ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள பான்காங் ஏரியின் அருகே இந்தியா சாலை அமைத்து வருவதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோக்லாமில் சீன படைகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சீன படையினரும் தங்களது ராணுவத்தினரை அங்கு நிறுத்தியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இருக்கும் பான்காங் ஏரி அருகே சாலை அமைப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், லடாக்கில் உள்ள பாங்டாங் ஏரியின் அருகே இந்திய அரசு சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் அமைதி ஏற்படும் வாய்ப்புகளே இல்லை. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது என கூறியுள்ளார்

