ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சி செய்வதாக டிடிவி தினகரன் அணியினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக தாக்கி பேசினார்.
அ.தி.மு.க.வின் முக்கிய அணிகளான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதவல் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைந்தன. ஆனால், டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் முதலமைச்சருக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரியலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, டிடிவி தினகரன் மற்றும் அவருக்கு ஆதரவு அளிக்கும் நிர்வாகிகளை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

‘மக்களுக்கு எதுவும் செய்யாமல், யாராலும் தலைவராக முடியாது. ஆட்சிக்கும், கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா நம்முடன் இருக்கும் வரை கட்சியையும் ஆட்சியையும் எவராலும் அசைக்க முடியாது. அ.தி.மு.க.வினர் ஒரே அணியாக நின்று கட்சியையும் ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும்’ என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆட்சியை கவிழ்க்கும் வல்லமை யாருக்கும் இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

