தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் திடீர் தீவிபத்து

258 0

201608140708313571_Thoothukudi-railway-station-caught-fire_SECVPFமுத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட இருந்த நிலையில் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதே போல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம் போல் நேற்று இரவு 7.50 மணிக்கு சென்னைக்கு புறப்பட தயாராக 1-வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ரெயிலில் ஏறுவதற்காக ஏராளமான பயணிகள் வந்து கொண்டு இருந்தனர்.

ரெயில் நிலையத்தின் கிழக்கு கடைசி பகுதியில் முட்புதர்கள் அதிகம் உள்ளன. தண்டவாளம் ஓரம் உள்ள அந்த முட்புதரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதற்கிடையே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி ஒன்றில் தீப்பற்றியதாக தகவல் பரவியதால் ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கு ரெயில்வே பாதுகாப்பு போலீசார் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மேலும் பரவியதால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து முட்புதரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ரெயிலில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் தீப்பற்றி எரிந்ததால், ரெயில் பெட்டிகளுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. ரெயில் நிலையம் பகுதியில் முட்புதரில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கமான நேரத்தில் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இதேபோல் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.25 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. நெல்லையை அடுத்த நாரைகிணறு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது ரெயிலின் 4-வது பெட்டியில் இருந்து தீப்பொறி கிளம்பியதாக தகவல் பரவியது. இதையடுத்து ரெயிலில் இருந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டிக்கு சென்று பார்த்தனர். ஆனால் ரெயில் பெட்டியில் இருந்து தீப்பொறி கிளம்பியதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவராததால், ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டது.