புத்தளம் அரவக்காட்டு பிரதேசத்தில் குப்பைகள் கொட்டுவதனை அரசு கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
கொழும்பு என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பொன் விளையும் இந்தப் பூமி மீது நன்மை தூவும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் திகழ்கின்றது.
புத்தளத்திற்கு வடக்கே உள்ள அரவாக்காடு பிரதேசம் வனப்புமிக்க ஓர் இடமாகும். வரலாற்றில் இப்பிரதேசத்தை பொன் பறிப்புப் பற்று என்று அழைக்கின்றனர். அந்தப் பொன் பறிக்கும் மண்ணை குப்பை மேட்டின் பூமியாக இந்த அரசாங்கம் மாற்ற விரும்புகின்றது. இதனை நாம் அந்த மக்களின் சார்பாக எதிர்க்கின்றோம்.
15 ஆண்டு காலமாக புத்தளம் பாராளுமன்ற உறுப்பினராக நான் பணியாற்றிய போது, அந்தப் பிரதேசத்தில் அடிக்கடி சுற்றித் திரிந்து, அந்த மக்களுடைய நல் வாழ்வாதாரங்களுக்காக பல வழிகளிலும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து செலவு செய்து வந்தேன்.
எனவே அந்த பொன் விளையும் பூமியை குப்பை குழங்கள் நிறைந்த பூமியாக மாற்ற வேண்டாமென இந்த அரசாங்கத்தை வேண்டுகின்றேன்.
புத்தளம் வாழ் மக்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். கொழும்பில் உள்ள குப்பை கூழங்களை அரவாக்காட்டுக்கு கொண்டு செல்லாமல் கொழும்பு பிரதேசத்தின் அருகே இடங்களைத் தேடி அதற்குரிய பரிகாரத்தைத் தேடுமாறு நாம் வேண்டுகின்றோம்.
அண்மையில் நான் மாத்தளை மாவட்ட எலகர பிரதேசத்திற்குச் சென்றேன். பல்லாண்டு காலமாக எலகரப் பிரதேசத்தில் மாணிக்கக்கல் தோண்டுவது வழக்கமாக இருந்தது. மாணிக்கத்தை அடி பூமியிலிருந்து மேலெடுப்பதற்காக ஏராளமான சிங்களக் குடும்பங்கள்தான் பணி புரிகின்றார்கள்.
அதனை விற்பனை செய்வது குறிப்பாக முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால் அந்தப் பிரதேசத்தில் இப்பொழுது மாணிக்கக்கல் தோண்டி எடுப்பதற்கு அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது.
எனவே அங்கே விளையும் மாணிக்கத்துக்கு மண் போடுகின்றது இந்த அரசாங்கம். இப்படியான ஒரு நல்லாட்சி எமக்கு தேவைதானா? ஆகவேதான் இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஏனைய மக்களோடு முஸ்லிம்களும் எழுந்து நின்று போர்க் கொடி தூக்கி வருகின்றனர்.
இந்த அரசாங்கம் நிச்சயமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களுடைய வேண்டுகோளாகும்.

