பார்சிலோனா தாக்குதலின் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தகவல்

236 0

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளி காம்ப்ரில்ஸ் நகரில் நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த வேன் ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியானதாகவும், 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்ற நிலையில், இதில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதியை போலீசார் தேடி வந்தனர்.

தாக்குதலை நடத்திய காரை வாடகைக்கு வாங்கியவன் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ட்ரிஸ் ஒபகிர் (20) என்று கூறிய போலீசார், அவனது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்ட போலீசார், அவர்களை நோக்கி சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். சில மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், காம்ப்ரில்ஸில் நடைபெற்ற என்கவுண்டரில் ட்ரிஸ் ஒபகிர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பார்சிலோனா தாக்குதலுக்கு தொடர்புடைய நான்கு பேரின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Leave a comment