குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமன ஆணை

354 0

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 62 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் ஆவர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 பதவிகள் அடங்கிய பணிகளில் 19 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 4 பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது.

பின்னர் அந்த தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மெயின்தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவும் வெளியிடப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இறுதி முடிவு கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டது.

வெற்றி பெற்ற 74 பேருக்கும் நேற்று சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி நியமனம் பெற்ற 74 பேரில் 62 பேர் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 62 பேரில் 17 பேர் துணை கலெக்டர்கள் ஆவார்கள். இவர்களில் பெண்கள் 9 பேர். 8 பேர் ஆண்கள். மேலும் 20 பேர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள். இதில் 11 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள். 22 பேர் வணிக வரித்துறை உதவி ஆணையர்கள். இவர்களில் 15 பேர் பெண்கள். 7 பேர் ஆண்கள். 3 மாவட்ட பதிவாளர்கள். இவர்களில் 2 பேர் பெண்கள். ஒருவர் மட்டும் ஆண்.

அவர்கள் அனைவரும் மனிதநேய மைய தலைவர் சைதை துரைசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். லஞ்சம் என்ற வார்த்தைக்கே இடம் இன்றி நேர்மையுடனும், திறமையுடனும் மக்கள் சேவை ஆற்றுவதை லட்சியமாக கொண்டு செயல்படவேண்டும் என்று அவர்களுக்கு சைதை துரைசாமி அறிவுரை வழங்கினார். அப்போது அவருடன் மனிதநேய மைய தலைமை தேர்வு ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் உடன் இருந்தார்.

Leave a comment